காலநிலை மாற்றம்: மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறையில் மீன்களின் ஓசை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, December 11, 2021

காலநிலை மாற்றம்: மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறையில் மீன்களின் ஓசை

காலநிலை மாற்றம்: மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறையில் மீன்களின் ஓசை

இந்தோனீசியாவில் மீட்டுருவாக்கப்பட்ட பவளப்பாறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஒட்டுக்கேட்டனர். அந்த ஒலிப்பதிவுகளில், "கூக்குரல், கரகரப்பொலி, உறுமல்" போன்ற ஓசைகளைக் கேட்டதாகவும் பவளப்பாறைகள் மீண்டு வருவதன் அடையாளமாக இது இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளில், அங்கு புதிய பவளப்பாறைகள் மீண்டும் விதைக்கப்பட்டுள்ளன.

கடலுக்கு அடியில் தரைத்தளத்தில் பதிவு செய்யக்கூடிய ஒலிப்பதிவுக் கருவிகளைப் இதற்காகப் பயன்படுத்தினர்.

அதில் சில ஒலிகள் இதுவரை பதிவு செய்யப்படாதவை. இவை, பாறைகளின் ஆரோக்கியத்தை அளப்பதற்கான ஒலி அளவீட்டை வழங்குவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகளை, ஜர்னல் ஆஃப் அப்ளைட் எக்காலஜியில் என்கிற சஞ்சிகையில் பிரசுரித்துள்ளனர்.

இந்த ஆய்வில், மீட்டெடுக்கப்பட்ட பவளப் பாறைகளிலிருந்து ஆய்வுக்குழு சேகரித்த ஒலிப்பதிவுகளை, அருகிலிருந்த ஆரோக்கியமான பவளத் திட்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவுகளோடும், அதற்கு அருகிலிருந்த மிகவும் சிதைந்த திட்டுக்களின் ஒலிப்பதிவுகளோடும் ஒப்பிட்டார்கள்.

"ஆரோக்கியமான, செழிப்பான திட்டுகளில் பதிவு செய்யப்பட்ட ஓசைகளைப் போலவே, மீட்டெடுக்கப்பட்ட திட்டுகளிலும் ஒலிக்கின்றன," என்று விளக்கினார், எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆய்வாளர் முனைவர் டிம் லாமன்ட்.

மேலும், "இந்த மறுசீரமைப்பு முயற்சி உண்மையில் வேலை செய்யும் என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது. ஆனால், இது தீர்வின் ஒரு பகுதி மட்டுமே. இதோடு, காலநிலை மாற்றம் மற்றும் உலகம் முழுக்கவுள்ள பவளப்பாறைகளுக்கு ஏற்படும் பிற அச்சுறுத்தல்களுக்கு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டியதும் உள்ளடங்கியுள்ளது," என்றும் கூறினார்.
வெடித்துச் சிதறிய பவளப் பாறைகள்
ஆய்வு செய்யப்பட்ட பவளத்திட்டுகளில் சில, மோசமாகச் சேதமடைந்திருந்த நிலையிலிருந்து மீட்டுருவாக்கப்படுகின்றன. பல்லாண்டு காலமாக வெடி வைத்து மீன்பிடிக்கும் முறை பவளப் பாறைகளைப் பல துண்டுகளாகச் சிதறடித்துவிட்டன. பவளப் பாறைகளில் வெடி குச்சிகளைப் போட்டு வெடிக்க வைத்து, பிறகு இறந்த மீன்களைச் சேகரிக்கும் அந்த மீன்பிடி முறை, பவளத் திட்டுகளை மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டன.

சிதைந்துபோயிருந்த இடமாகவே அவை எஞ்சியிருந்தன. கடல் தரையில் திடமான அடி மூலக்கூறு இல்லாததால், பவளப்பாறை வளர்வது மிகவும் கடினமாக இருந்தது. இந்தச் சேதத்தைச் சரிசெய்ய, இரும்பு சட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்தக் கட்டமைப்புகளில் உயிர்ப்புடன் இருந்த சிறு பவளப் பாறைகள் இணைக்கப்பட்டன.

ஒலிப்பதிவுகள் குறித்து விவரிக்கும் முனைவர் லாமன்ட், "பேகன் இறைச்சித் துண்டை வறுப்பது போன்ற அல்லது ரேடியோவில் வரும் கொரகொர சத்தத்தைப் போன்ற நிலையான ஓசை கேட்டது. பிறகு அந்த ஒலியின் மூலம், இடையிடையே சிறிய கூக்குரல், உறுமல் போன்றவற்றைக் கேட்கலாம்."

இந்த ஓசைகளுக்குக் காரணமான உயிரினங்களில் பலவும் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன. மீன்கள் எழுப்பும் ஒலிகள், பறவைகளின் ஒலிகளைப் போலவே பன்முகத்தன்மை கொண்டது.

பிபிசி ரேடியோ 4-ன் இன்சைட் சயின்ஸிடம் அவர் பேசியபோது, "சில நேரங்களில் எந்த உயிரினம் ஒலி எழுப்புகிறது என்பதை அதுகுறித்த அறிவின் உதவியோடு யூகிக்க முடியும். மற்ற சந்தர்ப்பங்களில் நமக்கு அது குறித்து எதுவும் தெரியாது," என்று கூறியுள்ளார்.

"என்னைப் பொறுத்தவரை, வேறு யாருமே இதுவரை கேட்காத ஒன்றை கேட்கக் கூடும், என்பது இந்த ஆய்வில் கிடைக்கும் உற்சாகத்தின் ஒரு பகுதி." என்கிறார் லாமன்ட்.

No comments:

Post a Comment

Post Top Ad