மாஸ்க் விவகாரம்; மாஸ் காட்டிய நெல்லை போலீஸ்!
மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் நெல்லை போலீசார் மாஸ் காட்டி இருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
உலக நாடுகளை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் புதிய வகை கொரனோவான ஒமைக்ரான் தொற்று மெல்ல மெல்ல பரவ தொடங்கியுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என காவல்துறை சமீபத்தில் அறிவுறுத்தியது.
அதைத்தொடர்ந்து மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் அவ்வபோது வாகன
தணிக்கையில் ஈடுபட்டு முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று நெல்லை தாலுகா காவல் நிலையம் சார்பில், ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், சீவலப்பேரி பாளையங்கோட்டை சாலையில் போலீசார் முகக் கவசம் அணிவது தொடர்பாக தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் போலீசார் 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர். அதேபோல் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதற்கிடையில் அந்த வழியாக சென்ற கேரளா சுற்றுலா வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது, உள்ளே இருந்த சுற்றுலா பயணிகள் ஒருவர் கூட முகக் கவசம் அணியாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாகன ஓட்டியிடம் போலீசார் 5000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அந்த வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளையும் மடக்கி போலீசார் சோதனையிட்டனர்.
பேருந்தில் பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் அவர்களிடம் தலா 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அபராதம் வசூலிப்பதோடு மட்டுமல்லாமல் பேருந்தில் நகைகள் திருடு போவது தொடர்பாக, போலீசார் பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment