கோவை மேயர் பதவி... வெளியூர் ஆட்டக்காரர்கள் இறக்கம் - செந்தில் பாலாஜி பக்கா ஸ்கெட்ச்!
கோவை மேயர் பதவியை கைபற்ற திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி பக்காவாக ப்ளான் போட்டு காய் நகர்த்தி வருவது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருந்தாலும், கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அக்கட்சி படுவீக்காக உள்ளது. கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் திமுகவின் நிலைமை மோசமாக இருப்பதை ஸ்டாலின் தனக்கான பிரஸ்டிஜ் ப்ராப்ளமாகவே பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதனைத்தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலும் வரவுள்ளது. ஸ்டாலினை பொறுத்தவரை அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக கட்சி கட்டமைப்பை இப்போதிலிருந்தே வலுப்படுத்தினால்தான் சரியாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, அரசின் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அமைச்சர் என அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்னர் நியமித்தார். இந்த நடவடிக்கை, விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மூலம் கைமேல் பலனாக திமுகவுக்கு கிடைத்தது.
அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை அடைய வேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பம். அதற்கு ஏற்றவகையில், பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று வருகின்றனர். குறிப்பாக, ஸ்டாலினின் பிரஸ்டிஜ் ப்ராப்ளமான கோவை மாவட்டத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, கொங்கு மண்டல கட்சி பொறுப்பு கைக்கு வந்ததும் அங்கு முகாமிட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
எப்படியாவது கொங்கை திமுகவின் கோட்டையாக மாற்றி ஸ்டாலினிடம் கொடுத்து தனது அசைன்மென்ட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பது செந்தில் பாலாஜியின் திட்டம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதன் முதற்கட்டமாகத் தான் அப்பகுதிகளில் வெயிட்டாக இருக்கும் தங்கமணி, வேலுமணியை அசைத்து பார்க்கும் சின்ன மூவ்தான் அவர்கள் மீது நடத்தப்பட்ட ரெய்டுகள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் இருக்கும் 100 வார்டுகளிலும் வெற்றி பெற்று கோவை மாநகராட்சி மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி. இதற்காக பக்காவக ஸ்கெட்ச் போட்டு காய்களையும் அவர் நகர்த்தி வருவதாக தெரிகிறது.
இதனிடையே, உளவுத்துறையின் ரிப்போர்ட் ஒன்றும் ஸ்டாலினின் கைகளுக்கு சென்றுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய பின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்குள், கட்சி கட்டமைப்புகளை பலப்படுத்தும் வேலைகளில் திமுக இறங்கியுள்ளது. குறிப்பாக, கோவையில் என்கின்றனர் உடன் பிறப்புகள்.
இதுகுறித்து கோவை திமுக வட்டாரங்களிடம் விசாரித்தபோது, “கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 1,290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பூத்துக்கும் தலா 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது. அந்தந்த ஏரியாவை சேர்ந்தவர்களை, மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை உறுப்பினர்களாக நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூத்துக்கும் பொறுப்பாளராக, கரூர் மாவட்ட நிர்வாகிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கோவை நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்றனர்.
தமிழகத்தில் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு
வெளியூரில் இருந்து ஆட்களை இறக்கினால் உள்ளூரில் ஒத்துழைப்பு இருக்குமா என்ற கேள்வியை நாம் முன்வைத்தபோது, “அந்த சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. இதனால் சிலர் அதிருப்தியிலும் இருக்கின்றனர். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சொந்த கட்சியினரே உள்ளடி வேலை பார்த்ததால்தான் தோல்வி கிடைத்தது. இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே, ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாததால், அதிகாரிகளும் ஒத்துழைப்பதில்லை. எனவே, அனைத்து வார்டுகளையும் திமுக வெற்றிகொள்ள வேண்டும். தற்போதைக்கு வெற்றி மட்டும்தான் முக்கியம்.” என்று ஆக்ரோஷமாக பேசுகின்றனர்.
செந்தில் பாலாஜி கொங்கிற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதே உள்ளூர் நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவியது. எனவே, அவர்கள் ஏதேனும் உள்ளடி வேலை பார்த்து, தேர்தல் தோல்விக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்து விடக் கூடாது என்பதாலும், கரூர் நிர்வாகிகளை செந்தில் பாலாஜி நியமித்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment