தலித் சமைத்தால் சாப்பிடமாட்டோம்.. மாணவர்கள் பிடிவாதம்.. சமையலர் பணிநீக்கம்!
தலித் பெண் சமைத்த உணவுகளை சாப்பிடமாட்டோம் என ஆதிக்க சாதி மாணவர்கள் பிடிவாதம்.
பள்ளியில் தலித் பெண் சமைத்த உணவை சாப்பிடுவதற்கு ஆதிக்க சாதி மாணவர்கள் மறுத்ததை தொடர்ந்து அந்த பெண் சமையலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடமாநில பள்ளிகளில் சமையல் செய்யும் ஊழியர்களை போஜனமாதா என அழைக்கின்றனர். உத்தராகண்ட் மாநில சம்பவத் மாவட்டத்தில் உள்ள சுகிதாங் என்ற பகுதியில் உள்ள அரசு இடைநிலை பள்ளியில் தலித் பெண் ஒருவர் இம்மாதம் போஜனமாதாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பள்ளியில் சமைக்கப்படும் உணவுகளை மாணவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்துவரத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. பள்ளியை சேர்ந்த 66 மாணவர்களில் 40 பேர் தலித் பெண் சமைத்த உணவை சாப்பிடுவதை
நிறுத்திவிட்டதாக தெரிகிறது.
இதுமட்டுமல்லாமல், ஆதிக்க சாதி பெண்ணும் வேலைக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தலித் பெண் பணியில் அமர்த்தப்பட்டது ஏன் என மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தலித் பெண் பணியமர்த்தப்பட்டதில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதால் அவரை பணிநீக்கம் செய்துவிட்டதாகவும், தற்காலிகமாக புதிய சமையலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி ஆர்.சி.புரோகித் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment