திமுகவினர் மீது நடவடிக்கை எடுங்கள், கொந்தளித்த திருமா: நன்றி சொன்ன சீமான்
திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தர்மபுரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் மேடையில் ஏறிய திமுகவினர் மேடையை அடித்து துவம்சம் செய்து விட்டனர். மைக்கைப் பிடுங்கி எறிந்தனர். சேர்களையும் தூக்கிப் போட்டு ரவுடித்தனமாக நடந்து கொண்டனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நாகர்கோவிலைச் சேர்ந்த மொழிப்போர் தியாகியான கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கருத்துக்கு கருத்துதான் எடுத்து வைக்கப் படவேண்டும் வன்முறையில் ஈடுபடக்கூடாது" என்று பேசினார்.
நாம் தமிழர் கட்சி மேடைகளில் பிற கட்சியினரை மோசமாக
விமர்சிக்கும் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் இருப்பினும் மேடையேறி தாக்குவது ஏற்புடையதல்ல என்ற கருத்தை சமூக ஆர்வலர்கள், அரசியல் பார்வையாளர்கள் முன் வைத்து வந்தனர். திமுக கூட்டணிக்குள்ளே இந்த குரல் எழுந்துள்ளது. ஆனால் திருமாவளவனின் இந்த கருத்து திமுகவினரை அதிருப்தியடையச் செய்துள்ளது.
திருமாவளவனின் கருத்துக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் தமிழர் கட்சியின் மேடையில் அத்துமீறி ஏறி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிய திமுக வன்முறைக்கும்பலின் அட்டூழியத்தைக் கண்டித்து நியாயத்தின் பக்கம் நிற்கும் விசிக தலைவர், அண்ணன் முனைவர் திருமாவளவன் அவர்களுக்கு எனது அன்பும், நன்றியும்!” எனத் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் தனது செய்தியாளர்கள் சந்திப்பில், “முன்னாள் அமைச்சரை கைது செய்ய நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் திமுக அரசு தடுப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் எல்லா அதிமுகவினர் மீதும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
குற்றச்சாட்டின் அடிப்படையில் மாநில காவல்துறை சட்டபூர்வமாக கடமையை செய்கிறார்கள் இதில், அரசு உள்நோக்கத்தோடு அதிமுகவை பழி வாங்குகிறது என பார்க்கத் தேவையில்லை” என்றார்.
No comments:
Post a Comment