உ.பி. தேர்தலை தள்ளிப் போட்டாலும் ஆச்சரியமில்லை.. என்ன இப்படி சொல்கிறார் சாமி?
ஓமைக்ரான் பரவலைத் தொடர்ந்து லாக்டவுன் போட்டு உ.பி. தேர்தலையும் தள்ளிப் போடலாம் என சாமி பேச்சு.
ஓமைக்ரானைக் காரணம் காட்டி லாக்டவுனை அமல்படுத்தி உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலை தள்ளிப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சுப்பிரமணின் சாமி கூறியிருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்தவர் என்றாலும் தொடர்ந்து சேம் சைட் கோல் அடித்துக் கொண்டிருப்பவர் சாமி. ஏதாவது பரபரப்பாக கூறி விவாதத்தைக் கிளப்பி விடுவதே இவரது வாடிக்கை. வேடிக்கையாக கருத்துக்களைக் கூறி விட்டு அதை சீரியஸாக சிந்திக்க வைத்து விடுவார்.
இந்த நிலையில் இப்போதும் படு கேஷுவலாக ஒரு கருத்தைக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், ஓமைக்ரானைக் காரணம் காட்டி ஒரு லாக்டவுனை கொண்டு வந்து உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளிப் போட்டு விட்டு, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினாலும் அமல்படுத்தலாம். இப்போது செய்ய முடியாததை அப்போது செய்யவும் முயற்சிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இது பலத்த
விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஓமைக்ரான் தொடர்பாக நாடு முழுவதும் லாக்டவுன் வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே பெரிதாக உள்ளது. உத்ததரப் பிரதேசத்திலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. ஆனால் யோகி ஆதித்யநாத் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் இருப்பதாகவும், சமாஜ்வாடி கட்சி கடும் போட்டியைக் கொடுத்து வருவதாகவும், விவசாயிகளின் அதிருப்தியும் கூடவே சேர்ந்திருப்பதால் பாஜக வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டியுள்ளது.
இதனால் பிரதமர் நரேந்திர மோடியே அடிக்கடி உ.பிக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அவர் உ.பிக்கு வந்து தொடங்கி வைத்து வருகிறார். ஒருபக்கம் ராமர் கோவில் கை கொடுக்கும் என்றாலும் கூட அதிருப்திகள் அதிகரித்து வருவதும் பாஜகவை கவலைக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில்தான் சாமி இப்படி ஒரு டிவீட் போட்டுள்ளார். அவர் அரசின் தரப்பில் நடக்கும் ஏதாவது நிகழ்வை மோப்பம் பிடித்திருக்கலாம். அதனால்தான் இப்படிச் சொல்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment