தேர்தல் சட்ட திருத்த மசோதா: கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 23, 2021

தேர்தல் சட்ட திருத்த மசோதா: கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு!

தேர்தல் சட்ட திருத்த மசோதா: கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு!


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தேர்தல் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா 2021க்கு ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் , குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டு, ஒப்புதல் அளித்த பிறகு மசோதா சட்டமாகும்.


இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோடி அரசின் தேர்தல் சீர்திருத்த சட்ட திருத்த மசோதா வெகுஜன வாக்குரிமை பறிக்கப்படுவதற்கும் மாநிலங்களின் அதிகாரத்தை ஆக்கிரமிப்பதற்கும் வழிவகுக்கும்.

பணபலத்தில் தேர்தல் நடத்துவதைத் தடுப்பதை உள்ளடக்கியதாக இருப்பதே உண்மையான தேர்தல் சீர்திருத்தம். தேர்தல் சட்ட திருத்த மசோதாவில் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்துள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.மக்களவையில் எந்த விவாதமும் நடத்தாமல் இதே மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது, புட்சாமி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. இதுமட்டுமின்றி, வெகுஜன வாக்குரிமையைப் பறிக்க வழிவகுக்கும் என்ற முக்கிய அச்சமும் இருக்கிறது.

1992க்குப் பிறகு, அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், நாட்டில் மூன்றடுக்கு நிர்வாக முறை அமல்படுத்தப்பட்டபோது, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசைத் தவிர, பஞ்சாயத்து ராஜ் அமைப்பும் ஏற்பட்டது.

இத்தகைய பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் ஒற்றை வாக்காளர் பட்டியலைக் கொண்டு வர விரும்புவதன் மூலம் நேரடியாகவே மத்திய அரசு அரசியல் விளையாட்டை ஆடுகிறது. இதுபோன்ற சட்ட திருத்தம் மூலம் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்க மோடி அரசு முயல்கிறது. குற்றவாளிகள், வகுப்பு வாதிகள், சாதி வெறியர்கள் மற்றும் வெறுப்பு அரசியலை வாக்காளர்கள் மத்தியில் தூண்டுபவர்களை தடுப்பதிலிருந்து தேர்தல் சீர்திருத்தம் தொடங்க வேண்டுமே தவிர, மாநில அரசுகளின் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தைப் பறிக்கக்கூடாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad