பூஸ்டர் டோஸுக்கு எந்த தடுப்பூசி? சிறார்களுக்கு எந்த தடுப்பூசி போட வேண்டும்?வழிமுறைகள் என்ன?
பூஸ்டர் டோஸ் செலுத்தும் போது ஏற்கனவே செலுத்திய தடுப்பூசியை மட்டுமே செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமான நடைபெற்று வருகின்றன. ஒமைக்ரான் பரவல் மூன்றாம் அலைக்கு வித்திட வாய்ப்புள்ளது என்பதால், சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும், பூஸ்டர் டோஸ் போடவும் அனுமதி அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும்” என அறிவித்தார்.
இதையடுத்து, சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்குமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், பூஸ்டர் டோஸுக்கு எந்த தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அது தொடர்பாக எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே போட்ட தடுப்பூசியை போஸ்டர் டோஸுக்கு போட வேண்டுமா? அல்லது வேறு ஒரு தடுப்பூசியை செலுத்தலாமா? அல்லது இரண்டையும் சம அளவில் கலந்து செலுத்த வேண்டுமா? இவை எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா என்ற விவாதங்கள் சர்வதேச அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. எனவே, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது பற்றி வல்லுநர் குழு கூடி ஆலோசித்துள்ளனர். அதில், பூஸ்டர் டோஸ் செலுத்தும் போது ஏற்கனவே செலுத்திய தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூஸ்டர் டோஸ் செலுத்தும் போது ஏற்கனவே செலுத்திய இரண்டு டோஸ் தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும். அதாவது, ஒருவர் 2 தவணை கோவாக்சின் செலுத்தி இருந்தால் அதனையே பூஸ்டராக செலுத்த வேண்டும் என அறிவுறுத்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் மற்றும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
** ஜனவரி 3ஆம் தேதி தொடங்கவுள்ள சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியே விருப்பத் தேர்வாக இருக்க வேண்டும். (குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது)
** 15 வயது நிறைவடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி வாய்ந்தவர்கள். ஒரு புரிதலுக்காக 2007ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும். கோவின் இணையதளம் மூலம் ஜனவரி 1ஆம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உடைய சிறார்கள் பள்ளி ஐடி கார்டுகளை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான வசதி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
** ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, இரண்டாவது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட வேண்டும்.
** 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். அப்படி செலுத்த தகுதி வாய்ந்தவர்கள் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment