லட்சத்தீவில் மீண்டும் பஞ்சாயத்து.. வெள்ளிக்கிழமை லீவு கட்.. ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றம்!
லட்சத்தீவு பள்ளிகளுக்கு இதுவரை இருந்து வந்த வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவுகளில் இதுவரை வெள்ளி, சனிக்கிழமை வார விடுமுறைகளாக இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடுமுறையை அந்த தீவு நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அதற்குப் பதில் ஞாயிறு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு அருகே அரபிக் கடலில் உள்ள தீவுதான் லட்சத்தீவு. அமைதியான, அழகான இந்தத் தீவில் பெரும்பாலும் மலையாளிகள்தான் வசித்து வருகின்றனர். தமிழர்களும் உண்டு. பழங்குடி பூர்வகுடிகள் நிறைந்த தீவு இது. இஸ்லாமியர்கள்தான் அதிகம்.
இந்தத் தீவுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளே நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் திடீரென பிரபுல் கோடா படேல் என்ற பாஜக பிரமுகரை இந்த தீவின் நிர்வாகியாக நியமித்தது மத்திய பாஜக அரசு. படேல், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர், முன்னாள் அமைச்சர். இவர் வந்தது முதலே லட்சத்தீவில் பெரும் பிரச்சினைகள் வெடிக்க ஆரம்பித்தன.
பல்வேறு கட்டுப்பாடுகளை படேல் போட ஆரம்பித்தார். அதில் முக்கிய பரபரப்பை ஏற்படுத்தியது கொரோனா கட்டுப்பாடுகளில் நடந்த குளறுபடிகள். அதுவரை கொரோனாவே இல்லாமல் இருந்த நிலையில் படேல் போட்ட புதிய கட்டுப்பாடு தளர்வால் கொரோனா புக ஆரம்பித்தது. 20க்கும் மேற்பட்டோர் பலியாகவும் செய்தனர்.
நிலம் கையகப்படுத்துதல் அடுத்த சர்ச்சை. அதுவரை இல்லாத குண்டர் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. மது பானங்களின் வாசனையே இல்லாமல் இருந்த லட்சத்தீவில் மது பான விற்பனைக்கு படேல் அனுமதி அளித்தார். அதேபோல மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தார். இப்படி அடுத்தடுத்து இவர் எடுத்த நடவடிக்கையால் லட்சத்தீவு மக்கள் கடும் அதிருப்திக்குள்ளானார்கள். போராட்டங்களும் வெடித்தன. டிவிட்டரிலும் லட்சத்தீவை பாதுகாப்போம் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது.
இந்த நிலையில் அடுத்த சர்ச்சையாக அங்கு வார விடுமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முஸ்லீம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாள் என்பதால் வெள்ளி, சனி அங்கு வார விடுமுறையாக இருந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகும். ஆனால் அதை தற்போது ஞாயிறு என்று மாற்றி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லட்சத்தீவு கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து ஞாயிறுகளும் இனி அரசு விடுமுறையாகும். அனைத்து வெள்ளிக்கிழமைகளும் வேலை நாளாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து லட்சத்தீவு எம்பி முகம்மது பைசல் கூறுகையில், இந்தத் தீவில் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாள் முதலே வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். சனிக்கிழமை அரை நாள் பள்ளிகள் நடைபெறும். இதுதான் நடைமுறையாக இருந்தது. ஆனால் தற்போது யாருடனும் கலந்து ஆலோசிக்காமல் விடுமுறை நாளை மாற்றியுள்ளனர்.
உள்ளூர் நிர்வாகத்தினரிடமும் கேட்கவில்லை. எம்பியான என்னையும் கலந்து ஆலோசிக்கவில்லை. மக்களின் விருப்பத்திற்கும், தீர்ப்புக்கும் மாறான நடவடிக்கை இது. இது ஒரு தலைபட்சமான முடிவு. மக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்தது தவறு என்றார்.
இந்த முடிவை திரும்பப் பெறுமாறு லட்சத்தீவு மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பிபி அப்பாஸ், நிர்வாகி பிரபுல் கோடா படேலுக்கு கடிதம் எழுதியுள்ளார். மாணவர்கள், பெற்றோர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் அதில் கேட்டுள்ளார். விடுமுறை மாற்றத்தால் லட்சத்தீவில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment