சென்னையில் திடீர் கனமழை ஏன்? -வானிலை ஆய்வு மையம் சொல்வது இதுதான்!
சென்னையில் நேற்று எதிர்பாராத விதமாக கனமழை கொட்டித் தீர்த்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வழக்கம்போல் முன்கூட்டியே கணித்திருந்தது. ஆனால் இந்த கணிப்புக்கு நேர்மாறாக மழை வெளுத்து வாங்கியது. பிற்பகல் 2:30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, தொடர்ந்து 5 மணி நேரம் கொட்டித் தீர்த்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கப் பாதைகளில் மழை நீர் லெள்ளமாக சூழ்ந்து போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட மாநகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இப்படி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சட்டென முடக்கும் அளவுக்கு, யாரும் எதிர்பாராத விதமாக சென்னையில் நேற்று திடீரென மழை பெய்தது ஏன் என்பதே நியூ இயரை எதிர்நோக்கிய வேளையில் தற்போது நம்முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த கேள்விக்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் உரிய விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை குறித்து புவியரசன் கூறியது:
சென்னை நேற்று திடீரென கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அது தவறு. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவே சென்னை கனமழை பெய்தது.
இதனை முன்கூட்டியே நாம் கணித்திருந்தாலும், கணித்தபோது இருந்த வேகத்தைவிட, கடலில் இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பரப்பிற்கு வந்து சென்றதன் காரணமாகவே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்பாராத விதமாக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. சில சமயங்களில் காற்று சற்று வேகமாக அடித்தாலும், கணிப்பு தவறி மழை வேறு மாவட்டத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது.
மேக வெடிப்பு என்றால் குறிப்பிட்ட நேரத்துக்குதான் மழை பெய்யும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டால் மட்டுமே தொடர் மழை பொழியும்.
ரேடார் உதவியுடன் மேகம் உருவாகும் இடம் அதன் வளர்ச்சி, நகர்வுகளை மட்டுமே வழங்க முடிகிறது, காரைக்கால் ரேடார் உதவியுடனே தற்போது இவை அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் துல்லியமாக வழங்க நவீன இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும். வடகிழக்கு பருவ காற்று இன்னும் தமிழக பகுதிகளை நோக்கி வீசுவதால் அவ்வப்போது ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment