அன்னபூரணியின் சக்தி; தொட்ட வாலிபருக்கு ‘ஷாக்’!
அம்மனின் அவதாரம் என கூறிக்கொண்டு அருள்வாக்கு அருளும் அன்னபூரணியின் மகா சக்தி வெளிப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, அவரை தொட்ட வாலிபருக்கு அடித்த ஷாக்கை பார்த்து அவரது பக்தர்கள் பெருமையும், பூரிப்பும் அடைகின்றனர்.
கடந்த சில நாட்களாக அன்னபூரணி அரசு அம்மா என்கின்ற பெண் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக்கொண்டு பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் அளிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருவதை காண முடிகிறது.
இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தைகள் ; பொதுமக்கள் பீதி!
இவர், வேறு யாருமில்லை. தனியார் டிவியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மூலம் இன்னொருத்தி புருஷனை அபகரித்து அவரது மனைவி, மகன், மகளை கதற வைத்து சென்ற அதே அன்னபூரணி தான்.
அன்னபூரணியின் முகநூல் பக்கத்தினுள் நுழைந்தால் கழுத்து நிறைய நகைகள், முகத்தில் பளபளக்கும் மேக்கப், பேச துடிக்கும் லிப்ஸ்டிக் உதடுகளுடன் நம்ம அன்னபூரணியா இது? என்று வியக்க வைக்கும் அளவுக்கு படங்களும், வீடியோக்களும் கொட்டி கிடக்கின்றன.
நடக்கின்றபோது பெய்யும் பூ மழை, பரவசத்தில் ஆட வைக்கும் செட்டப் நாற்காலி, அழுது புரண்டு வித்தை காட்ட ரெடிமேடு பக்தர்கள் என்று பெரிய அலப்பறையை ஏற்படுத்தி, நித்தியானந்தாவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு, நவீன காலத்தை கனகச்சிதமாக பயன்படுத்தி உள்ளார் அன்னபூரணி.
இப்படி எவ்வளவு செலவு செய்து, எத்தனை கெட்டப்கள் போட்டாலும் அன்னபூரணியும், அவரது வாழ்க்கை பின்னணியும் தமிழக மக்கள் மற்றும் ஊடகங்களின் வாய்க்கு அவலாக இருக்கிறது என்பது தான் உண்மை.
இப்படிப்பட்ட அன்னபூரணி பற்றி மீம்ஸ் போட்ட ஒரு வாலிபர், தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று சொன்னால் நம்ப முடியவில்லை அல்லவா? ஆம். ஆனால் நம்பி தான் ஆக வேண்டும்.
கோயம்புத்தூர் குனியமுத்தூர் காவல் சரகத்தை சேர்ந்தவர் அனீஷ். இவரை தான், அன்னபூரணி குறித்து முகநூலில் பதிவு போட்டார் என்பதற்காக குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலமுருகன் கூறியதாவது:
அன்னபூரணி போன்ற சாமியார்கள் எல்லா மதத்திலும் உள்ளார்கள் என்பதை சமூக வலைதள வாசிகளுக்கு உணர்த்தும் வகையில் சமீபத்தில் அனீஷ் ஒரு மீம்ஸ் வெளியிட்டார்.
இதுதொடர்பாக அன்னபூரணி உள்பட யாருமே புகார் கொடுக்காத சூழலில் தானாக முன்வந்து கோயம்புத்தூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து அனீஷை கைது செய்துள்ளது.
ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்றத்தில் சாமிநாதன் என்பவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் நகைச்சுவை மீம்ஸ்களுக்காக கைது செய்யக்கூடாது என நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் தீர்ப்பளித்துள்ளார்.
இதையெல்லாம் நீதி மன்றத்தில் எடுத்து கூறியும் எங்கள் தரப்பு விளக்கம் ஏற்கப்படாமல் முகநூல் பதிவுக்காக அனீஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு வழக்கறிஞர் பாலமுருகன் கூறினார்.
இந்த கைது சம்பவம் தான் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது, சமூக வலைதளவாசிகள் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜ, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளே தண்ணீர் அருந்தும் தமிழ்நாட்டில் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அன்னபூரணிக்கு ஆதரவாக காவல் துறையினரே கருத்து சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்திருப்பது, சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.
No comments:
Post a Comment