இதயப்பகுதியை வெட்டி எறிந்து விட்டனர்: சரி செய்ய சொன்ன வானதி!
தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தமிழக அரசின் ஆணைக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்களில், பொது நிறுவனங்களில், பொது நிகழ்ச்சிகளின் போது நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய கீழ்க்கண்ட வரிகளைக் கொண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு
அரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், “நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!”
தமிழ்த்தாய் வாழ்த்தின் மேற்கண்ட வரிகள், 55 வினாடிகளில் பாடப்படவேண்டும் என்றும் தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தமிழக அரசின் ஆணைக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தமிழக அரசின் ஆணையை மகிழ்வுடன் வரவேற்கிறேன். தமிழறிஞர் மனோண்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய முழுப் பாடலையும் பாட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இதயப்பகுதியை வெட்டி எறிந்த வரலாறு சரி செய்யப்பட வேண்டும்.” என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment