புத்தாண்டில் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்... சூப்பர் திட்டங்கள்!
முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள் புத்தாண்டு முதல் இந்தத் திட்டங்களில் கவனம் செலுத்தலாம்.
2021ஆம் ஆண்டு முடிவடைந்த புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே மிச்சம் உள்ளன. 2020, 2021ஆம் ஆண்டுகளில் கொரோனா பிரச்சினை தீவிரமாக இருந்தது. இதனால் நிறையப் பேருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. பலர் தங்களது வேலையையும் சம்பளத்தையும் இழந்தனர். பலருக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், சேமிப்புப் பழக்கம் இருந்தவர்கள் எப்படியோ நெருக்கடியைச் சமாளித்தனர். நிறையப் பேர் கொரோனா பிரச்சினைக்குப் பிறகு சேமிப்பு மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இப்போது ஒமைக்ரான் பிரச்சினை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் பணத்தைச் சேமித்து வைத்தால்தான் நெருக்கடியான சமயத்தில் தப்பிப் பிழைக்க முடியும். அதற்கு புத்தாண்டு முதல் நல்ல லாபம் தரும் சேமிப்புத் திட்டங்களில் இணைந்து பணத்தைச் சேமித்து வைக்கலாம். அப்படிப்பட்ட நல்ல சேமிப்புத் திட்டங்கள் இதோ உங்களுக்காக...
பிபிஎஃப்!
பொது வருங்கால வைப்பு நிதி அல்லது பிபிஎஃப் என்பது ஆபத்து இல்லாத முதலீட்டாளர்களுக்கு சிறந்த நீண்ட கால முதலீடாகும். ஏனெனில் இது உத்தரவாத வரி இல்லாத வருமானத்தை வழங்குகிறது. பிபிஎஃப் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது. நடப்பு காலாண்டில் பிபிஎஃப் 7.10 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்தக் கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் பல வருடங்களுக்கு ஐந்து வருடங்கள் மூலம் கணக்கை நீட்டிக்க முடியும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா!
சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும். பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ கணக்கு துவங்கலாம். இதில், செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. பெண் குழந்தை பெயரில் கணக்கு தொடங்கி அதன் 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைக்கிறது.
மாத வருமான திட்டம்!
ஒவ்வொரு மாதமும் வருமானம் தரும் இந்த தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1,500 மற்றும் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். இணைப்புக் கணக்கில் ரூ.9 லட்சம் வரையில் சேமிக்கலாம். இத்திட்டத்துக்கான வட்டி 6.6 சதவீதம். இத்திட்டம் 5 ஆண்டு முதிர்வு காலம் கொண்டது. இதுவும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்தான்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்!
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கும் மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாகும். ஓய்வூதியச் சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, 55 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆனால் 60 வயதுக்கு குறைவான ஒரு நபருக்கு 5 வருட காலத்திற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் திறக்கப்படலாம். ஆனால் மொத்த வரம்பு ரூ.15 லட்சமாக இருக்க வேண்டும். தற்போது இத்திட்டத்தின் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதமாக உள்ளது.
No comments:
Post a Comment