போலீஸ் அடித்தார்களா? ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் நீதிபதியிடம் சொன்ன அந்த வார்த்தை...! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 22, 2021

போலீஸ் அடித்தார்களா? ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் நீதிபதியிடம் சொன்ன அந்த வார்த்தை...!

போலீஸ் அடித்தார்களா? ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் நீதிபதியிடம் சொன்ன அந்த வார்த்தை...!


ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று வேலூர் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோயில் அருகில் அமைந்துள்ளது பிரபல நகைக் கடை ஜோஸ் ஆலுக்காஸ். 5 தளங்களுடன் இயங்கி வரும் இந்த நகை கடையில் கடந்த டிச. 15ம் தேதி சுமார் 16 கிலோ மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.ஜி பாபு மற்றும் வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து காவல்துறையின் தீவிர புலன் விசாரணைக்கு பிறகு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டீக்காராமன் (22) என்பவரை நேற்று (டிச. 20) காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 16 கிலோ நகைகளை காவல்துறையினர் மீட்டனர்.

இந்நிலையில், இன்று (டிச. 21) பிற்பகல் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதித்துறை நடுவர் எண். 4ல் நீதிபதி ரோஸ் கலா முன்பு டீக்காராமன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, "என்னை கைது செய்தது என் பெற்றோருக்கு தெரியும், இருப்பினும் எனக்கு அவர்களது துணை இல்லை. என்னை ஜாமினில் எடுக்க யாரும் வரமாட்டார்கள். எப்போது என்னை வெளியே விடுவீர்கள்?" என கொள்ளையன் நீதிபதியிடம் கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து, கொள்ளையனுக்கு ஜாமின் தொடர்பாக உதவி செய்ய இலவச சட்ட உதவி மையத்திற்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

மேலும், கை, கால்களில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து நீதிபதி காவல்துறையினரிடம் எழுப்பிய கேள்விக்கு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் விளக்கம் அளித்தனர்.

இறுதியாக வழக்கு விசாரணையை 04.01.2022க்கு ஒத்தி வைத்த நீதிபதி டீக்காராமனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து டீக்காராமன் தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

No comments:

Post a Comment

Post Top Ad