விசாரணையின்போது வழக்கறிஞர் செய்த சேட்டை.. கடுப்பான நீதிபதிகள்!
விசாரணையின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
காணொளி காட்சி விசாரணையின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று ஆரம்பித்தபோது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி மற்றும் காணொளி காட்சி விசாரணை என இரண்டு விதமான விசாரணை முறைகளும் தற்போது அமலில் உள்ளன.
நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ( நீதிபதி ஜி.கே.இளந்திரையன்) ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர், ஒரு பெண்ணுடன் இணைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சகா வழக்கறிஞர்கள் மட்டும் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
இது போன்ற சம்பவங்களை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என தெரிவித்துள்ள நீதிபதிகள், சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment