முழு ஊரடங்கிற்கு தயாராகும் தமிழ்நாடு; மாநில அரசுக்கு புதிய சிக்கல்!
நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை நெருங்கியதும் கொரோனா வைரஸ் பரவலும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 12ஆம் தேதி வரை தினசரி தொற்று சராசரியாக 15 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்து வந்தது. அதன்பிறகு 20 ஆயிரத்தை தாண்டி கொரோனா பரவல் பதிவாகி வருகிறது. கடந்த 13ஆம் தேதி அன்று புதிதாக 20,911 பேருக்கும், 14ஆம் தேதி 23,459 பேருக்கும், 15ஆம் தேதி 23,989 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கையை பொறுத்தவரை 25, 26, 11 என பதிவாகியுள்ளன. மறுபுறம் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸும் படிப்படியாக அதிகரித்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே அத்தியாவசிய சேவைகள் தவிர வேறு எதுவும் கிடைக்காது. தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக அடுத்த இரண்டு வாரங்கள் தமிழக மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பக்கூடும். இதனால் பொதுமக்கள் ஒன்று கூடும் சூழல்கள் அதிகரிக்கும். அது நோய்த்தொற்று பரவலுக்கு வாய்ப்பாக அமையும் என்று சொல்லப்படுகிறது.
எனவே கட்டுப்பாடுகளின் பிடியை இறுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது. அடுத்தகட்டமாக ஞாயிற்றுக்கிழமை போன்று சனிக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் வார இறுதி நாட்களில் வீடுகளிலேயே முடங்கியிருக்க வேண்டும். இது ஓரளவு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம்.
ஆனால் வார நாட்களில் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்வர். எனவே அனைத்து நாட்களிலும் கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. அதேசமயம் பொருளாதாரம் முடங்கும் அளவிற்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் படாது என்று தெரிகிறது. ஏனெனில் முதல் இரண்டு கொரோனா அலைகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் தமிழக அரசுக்கு சரியான வழியை காட்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எனவே பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வண்ணம் தமிழ்நாட்டில் கடும் ஊரடங்கு அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அடுத்தக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment