தமிழ்நாட்டு சுரங்கங்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகம் முழுவதும் சுரங்க நடவடிக்கைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள தனியார் சிமெண்ட் (ஏசிசி சிமெண்ட்) தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் நிறுவனம் வாளையார் வனப் பகுதியில் உள்ள பட்டா நிலம் மற்றும் புறம்போக்கு நிலங்களில் கனிம வளங்கள் உரிய அனுமதியுடன் எடுத்து வந்ததாக தெரிவித்திருந்தனர்.
சிமெண்ட் தயாரிப்பதற்கு லேட்டரைட், இரும்புத் தாது, பாக்சைட், ஜிப்சம் போன்ற சுண்ணாம்புக் கல்லைத் தவிர, பல தாதுப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு வகையான சிமென்ட் தயாரிப்பில் முதல் கட்டம் 'கிளிங்கர்' எனப்படும் கலவையாகும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
சுரங்க குத்தகை ஒப்பந்தத்தின் பிரிவு 13ன் படி, எடைப் பாலங்கள் மற்றும் சுரங்க குத்தகைகளின் இருப்பிடத்தைக் காட்டும் திட்டத்தைச் சமர்ப்பித்து அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்களுக்கான ராயல்டி உரிமையை முறையாகச் அரசுக்கு செலுத்தி வருவதாகவும், சுரங்க குத்தகைப் பகுதிகளில் இருந்து உயர்த்தப்பட்ட மற்றும் அகற்றப்பட்ட சுண்ணாம்புக் கற்களுக்கான எடைப் பாலத்தில் அவர்கள் எடையின் அடிப்படையில் உரிமத்தொகை செலுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் கனிமவளத்துறை உரிமத்தொகை அதிகம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அந்த நோட்டீசை ரத்து செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மற்றும் பூமியின் கீழ் உள்ள அனைத்தும் தேசத்தின் செல்வங்கள் என்றும், அவை "இந்திய மக்களுக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டுள்ளார். சில பேராசை கொண்டவர்களால் அநியாய லாபமம் ஈட்டுவதற்காக சுரண்டுவதை யாராலும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ள நீதிபதி, தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில், தேசத்தின் செல்வமும் பொது நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எந்த வகையிலும் சுரண்டல்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி தேசத்தின் நலன் மற்றும் அதன் சொத்துக்களை எந்த சூழ்நிலையிலும் சமரசம் செய்ய முடியாது என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான அரசியலமைப்பு ஆணைகளை அடைய அனைத்து வகையிலும் பொது நலன் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
தனியார் சிமெண்ட் ஆலையிடம் தமிழக அரசின் கனிமவள துறை சார்பில் அளித்த நோட்டீஸ்களில் கேட்கப்பட்டுள்ள ராயல்டி உரிமையை மனுதாரர் செலுத்தவேண்டும் எனவும் மனுதாரர் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் 'ட்ரோன் மூலம் அளவீடு செய்யப்பட வேண்டும் என வும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிடுள்ளார்.
தமிழகத்தில் சுரங்க நடவடிக்கைகள் மற்றும் சுரங்கங்களை கையாள்பவர்கள், வெட்டியெடுக்கப்பட்ட கனிமங்களை மதிப்பிடுவதற்கும், வசூலிக்கப்பட வேண்டிய ராயல்டியை நிர்ணயம் செய்வதற்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சுரங்க நடவடிக்கைகளிலும், இனி ட்ரோன் அளவீடுகளை கொண்டு அளவிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த உத்தரவுகளை செயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 4 மாதங்களுக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தார்.
No comments:
Post a Comment