சனி, ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து - முதல்வர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!
முழு ஊரடங்கு உத்தரவை ரத்து செய்து, முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில், கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக, இரவு நேர ஊரடங்கு மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. எனினும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.
கர்நாடக மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி பதிவாகியது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனையில் நோயாளிகள் சேர்க்கப்படுவது குறைவு என்பதால், வார இறுதி ஊரடங்கை நீக்கலாம் என்று, கர்நாடக மாநில அரசுக்கு, மருத்துவ தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்தது.இந்நிலையில் இன்று, தலைநகர் பெங்களூரில், வார இறுதி ஊரடங்கை நீக்குவது குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வார இறுதி ஊரடங்கை நீக்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் அசோகா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மருத்துவ தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின்படி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நபர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் விகிதம் 5 சதவீதமாக உள்ளது. இந்த சதவீதம் அதிகரிக்கும் பட்சத்தில், மீண்டும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வார இறுதி ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டும் என்று மக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களிடமிருந்து கோரிக்கை வந்தது. ஆனால் நிபுணர்களின் அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.இருப்பினும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடரும். ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும். உடற்பயிற்சிக் கூடங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, தலைநகர் பெங்களூரில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு நிலைமைக்கு ஏற்ப, மற்ற மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் கர்நாடக மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment