ஆசிரியர்களுக்கு டபுள் ஜாக்பாட் - வெளியானது சம்பள உயர்வு!
இரு மடங்கு சம்பள உயர்வு அளித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விருந்தினர் விரிவுரையாளர்களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வு அளித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கல்லூரிகளில் பணிபுரியும் விருந்தினர் விரிவுரையாளர்கள் (Guest Lecturers), சம்பளத்தை உயர்த்தி வழங்கக் கோரி நீண்ட நாட்களாக மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க மூன்று பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருந்தினர் விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தனிப்பட்ட முறையில் தனிக் கவனம் செலுத்தியதற்கு நன்றி. விருந்தினர் விரிவுரையாளர்களுக்கு யுஜிசி நிர்ணயித்த தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரமும், யுஜிசி நிர்ணயித்த தகுதி இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது குறைந்தபட்சம் மாதம் ரூ.26 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.32 ஆயிரமாக சம்பளம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இப்போது, 5 ஆண்டுகளுக்கும் மேலாக விருந்தினர் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுபவர்கள் மற்றும் யுஜிசி நிர்ணயித்த தகுதி பெற்றவர்கள் மாதம் ரூ.32,000 ஊதியத்தைப் பெறுவார்கள். அதே நேரத்தில் யுஜிசி நிர்ணயித்த தகுதிகளுடன் 5 ஆண்டுகளுக்கும் குறைவான விருந்தினர் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
.
இதேபோல், 5 ஆண்டுகளுக்கும் மேலாக விருந்தினர் விரிவுரையாளர்களாகப் பணிபுரியும், ஆனால் யுஜிசி நிர்ணயித்த தகுதி இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.28,000 வழங்கப்படும், அதே நேரத்தில் 5 ஆண்டுகளுக்கு குறைவாக விருந்தினர் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஆனால் யுஜிசி நிர்ணயித்த தகுதி இல்லாதவர்கள் மாதம் 26,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் விவரித்தார்.
No comments:
Post a Comment