யூடியூப் சேனல்களுக்கு தடை.. இந்திய அரசு உத்தரவு!
35 யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு.
போலி செய்திகளை பரப்பிய 35 யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பி வந்ததாக அரசு கூறுகிறது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாளர் அபூர்வ சந்திரா இன்றூ செய்தியாளர்களிடம் பேசியபோது, “பொய் செய்திகளை பரப்பிய 35 யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றன.
இவர்கள் பொய் செய்திகளை பரப்பி, இந்தியாவுக்கு எதிராக போலிச் செய்தி போர் தொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார். மேலும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை கூடுதல் செயலாளர் விக்ரம் சஹாய், “சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள், சமூக வலைதள கணக்குகள் மீது ஐடி விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
35 யூடியூப் சேனல்கள், இரண்டு ட்விட்டர் கணக்குகள், இரண்டு இன்ஸ்டகிராம் கணக்குகளை தடை செய்துள்ளோம். இந்த சேனல்களும், சமூக வலைதளங்களும் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்ப பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த கணக்குகள் பொய் செய்தி மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
உளவுத் துறை அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விக்ரம் சஹாய் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு 1.2 கோடிக்கு மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களும், 130 கோடிக்கு மேற்பட்ட பார்வைகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட 35 யூடியூப் சேனல்களும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருவதாக தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment