நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு உள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் மாதம் 4 ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற இட பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டு உள்ளது.
கடலூர், விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மாநகராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளுக்கும், சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றும் வரும் நிலையில், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. கூட்டணி கட்சியான பாஜகவுடன் இதுவரை இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment