இலவு காத்த கிளி போல் காத்திருக்கும் பட்டதாரிகள்… அரசு பணியிடங்களுக்கு தடையாக உள்ளது எது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 10, 2022

இலவு காத்த கிளி போல் காத்திருக்கும் பட்டதாரிகள்… அரசு பணியிடங்களுக்கு தடையாக உள்ளது எது?

இலவு காத்த கிளி போல் காத்திருக்கும் பட்டதாரிகள்… அரசு பணியிடங்களுக்கு தடையாக உள்ளது எது?


புதுச்சேரியில் கடந்த ஏழு ஆண்டுகளாக அரசு வேலைவாய்ப்புக்கு போட்டித்தேர்வு நடைபெறாததால் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளது. பல லட்சம் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாததால் மக்களின் அடிப்படை, அத்தியாவசியப் பணிகள் முறையாக நடைபெறாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒவ்வொரு துறையிலும் 3-ல் ஒரு பங்கு பணியிடம் காலியாக உள்ளது. இதை நிரப்பாததால் படித்த இளைஞர்களின் கனவு தகர்ந்துள்ளது.

7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிடங்களை நிரப்பாததால் பட்டதாரி இளைஞர்கள் வயது வரம்பைக் கடந்துள்ளனர். அரசு சார்பு நிறுவனங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பின்மையில் நாட்டிலேயே புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு என தனியாக பணியாளர் தேர்வு ஆணையம் இல்லை.

இங்குள்ள குரூப்-ஏ போன்ற உயர் பதவிக்கான பணியிடங்கள் மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன. புதுவையை பொறுத்தவரை முக்கியமான 38 அரசுத்துறைகள் உள்ளன. இத்துறைகளுக்கான உயர் பதவிகள் போக மீதியுள்ள இடங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்று, நிர்வாக சீர்த்திருத்தத்துறை மூலம் நிரப்பப்படுன்றன. மொத்தம் 37,929 இடங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.

பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர், விரிவுரையாளர், ஊழியர் என 2 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு அடுத்தபடியாக பொதுப்பணித்துறையில் 1,100, சுகாதாரத்துறையில் 600, மின்துறையில் 400, உயர்கல்வித்துறையில் 200 என ஒவ்வொரு துறையிலும் உள்ள காலி இட பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

வேலைவாய்ப்பின்மையில் புதுச்சேரி நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. இதுதொடர்பாக அண்மையில் வெளியான சர்வே முடிவில், புதுச்சேரி 75.8 சதவீதத்துடன் முதலிடத்தை பிடித்திருந்தது. அடுத்தபடியாக தமிழகம் (49.8 சதவீதம்), ஜார்க்கண்ட் (47.1 சதவீதம்), பீகார் (46.6 சதவீதம்), ஹரியானா (43.2 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3, 4 5 இடங்களை பிடித்துள்ளன.
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல், விவசாயம், சட்டம், பி.எட்., கேட்டரிங், கலை மற்றும் அறிவியல் என மொத்தம் 145 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இது பாண்டிச்சேரி கில்லி; கபடி ஆட்டத்தில் அமைச்சர் மற்றும் சபாநாயகர்!

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து முடித்துவிட்டு வெளியே வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அரசு பணி என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. இருப்பினும், பல இளைஞர்கள் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போட்டித்தேர்வுக்கு படிக்கின்றனர்.

அரசு பணிதான் இல்லை. தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லலாம் என்றால், அங்கு உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. அதையும் சமாளித்து சென்றால் உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. பலர் குடும்ப கஷ்டத்தின் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலையில் சொற்ப ஊதியத்துக்கு வேலைக்கு செல்கின்றனர். இதனால் இளைஞர்கள் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், பலர் வேலையில்லாத விரக்தியில் தவறான பாதைக்கு செல்கின்றனர். இதனால் சமூக குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எந்த வேலைவாய்ப்பும் இல்லாத நிலையில் ரவுடிகள் குரூப்பில் சேர்ந்து வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர். இதற்கிடையே அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பஞ்சாலைகள் நிர்வாக சீர்க்கேடு, தொடர் நஷ்டம் காரணமாக மூடப்பட்டு வருகின்றன. பாப்ஸ்கோ, பாசிகதர் கிராம வாரியம், ரேஷன் கடை, அங்கன்வாடி ஆகிய இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பல மாதங்களாக சம்பளமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு வேலைக்கு படித்து வரும் இளைஞர் ரமேஷ் கூறியதாவது:
"புதுச்சேரியில் கடந்த 7 ஆண்டுகளாக புதிய வேலை வாய்ப்புகள் எதுவும் ஏற்படுத்தப்படவல்லை. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருந்தும் அரசு நிரப்பததால் அரசு வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தற்போது அரசு பணிக்கு தேவையான வயதை கடந்துவிட்டது. அரசு காலிபணியிடங்களை நிரப்ப முற்பட்டால் வயது வரம்பை தளர்த்தி எங்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

அரசு பணியிடங்கள் குறித்து புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:
"அரசுத் துறைகளில் பல பணிகள் நிரப்பப்படாமல் உள்ளன. பத்தாயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. சரியாக நிரப்பப்படவில்லை. இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலை தரவேண்டும். அரசுப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தனியார் தொழிற்சாலைகள் வர சுமுகமான நல்ல சூழலை அரசு உருவாக்கும். அதற்கான முயற்சியை எடுப்போம்.

தொழில் வல்லுநர்களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்போம். சிறந்த மாநிலமாகப் புதுச்சேரியைக் கொண்டுவர ஆளுநருக்கும் விருப்பம். ஆளுநர் ஒத்துழைப்புடன் புதுச்சேரியைச் சிறந்த மாநிலமாக்குவோம் என கூறியுள்ளார். தொடர்ந்து படிப்படியாக அனைத்து பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றார்.


No comments:

Post a Comment

Post Top Ad