எம்ஜிஆர் இல்லைன்னா கருணாநிதியே கிடையாது...அதிமுக ஜெயக்குமார் ஒரேபோடு!
எம்ஜிஆர் இல்லையென்றால் கருணாநிதியே இருந்திருக்கமாட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஒரே போடாக போட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் அதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவது பொங்கல் பரிசு கலப்படத்தால் திமுக அரசு மீதான மக்கள் வெறுப்பை திசை திருப்பவே நடைபெறுகிறது. இதற்கெல்லாம் அதிமுக பயப்படாது. தமிழ், தமிழர் என்று எப்போதும் பேசும் திமுக அரசு ஊசி உள்ளிட்ட கொள்முதலை வடமாநிலத்தவர்களுக்கு வழங்கியது ஏன்?
எம்ஜிஆரை பெரியப்பா என்று அழைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது பிறந்த நாளுக்கு டிவிட்டரில் கூட வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? எம்ஜிஆர் இல்லையென்றால் கருணாநிதியே இருந்திருக்கமாட்டார். முதலமைச்சராக கருணாநிதியை முன்மொழிந்ததே எம்ஜிஆர்தான். திமுகவை பட்டி, தொட்டியெங்கும் வளர்த்ததே எம்ஜிஆர் தான்.
2004, 2009 மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோது அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி கலந்து கொள்ளாத நிலைக்கு செய்தி மற்றும் விளம்பர துறை தான் காரணம்.
ஊர்தியை சரியான வடிவில் வடிவமைக்காத காரணத்தால்தான் அணிவகுப்பில் பங்கேற்க முடியவில்லை, இதற்கு தமிழக அரசின் தகுதியின்மை தான் காரணம. இந்த விவகாரத்தில் முதலில் மேற்கு வங்க முதலமைச்சர் எதிர்ப்புப் தெரிவித்த பின்னரே, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.
தனது பெயரில் மருத்துவ பல்கலைக்கழகத்தை உருவாக்கியதே எம்ஜிஆர் தான், இது அப்போதைய சுகாதார துறை அமைச்சர் ஹெண்டேவிற்கு தெரியும். வரலாற்றை மாற்றாதீர்கள். எம்ஜிஆர் நினைவிடத்தை பாரமரிப்பு என்ற பெயரில் அங்கு வெறும் குடையைதான் வைத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஜெயலலிதா தான் பெரிய அளவில் எம்ஜிஆர் நினைவிடத்தை மாற்றினார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment