சமாஜ்வாடியின் கோட்டையில் களம் இறங்குகிறார் அகிலேஷ்.. களை கட்டும் கர்ஹால்
உத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதாக அறிவிப்பு.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மைன்பூரி மாவட்டத்தில் உள்ள சமாஜ்வாடிக் கட்சியின் கோட்டையாக கருதப்படும் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
மைன்பூரி மாவட்டமே சமாஜ்வாடிக் கட்சியின் கோட்டைதான். இந்த மாவட்டத்தில் உள்ள மைன்பூரில லோக்சபா தொகுதியில்தான் முலாயம் சிங் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குப் போனார். 5 முறை இந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முலாயம் சிங். கடந்த பல வருடமாகவே இந்தத் தொகுதி சமாஜ்வாடிக் கட்சி வசம்தான் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த லோக்சபா தொகுதிக்குட்பட்ட கர்ஹால் சட்டசபைத் தொகுதியில்தான் அகிலேஷ் யாதவ் போட்டியிடவுள்ளார். கடந்த 3 தேர்தலாக இந்தத் தொகுதி சமாஜ்வாடிக் கட்சி வசம்தான் இருக்கிறது.
கர்ஹால் தொகுதி இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் ஒரே ஒரு முறை மட்டுமே பாஜக ஜெயித்துள்ளது. மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகளும், காங்கிரஸும் மட்டுமே இங்கு வென்றுள்ளன.2002 தேர்தலில் பாஜக இங்கு வென்றது. இது மட்டுமே பாஜகவுக்குக் கிடைத்த ஒரே வெற்றியாகும். அதன் பின்னர் மீண்டும் நிலைமை மாறியது. 2007 முதல் இந்தத் தொகுதி சமாஜ்வாடிக் கட்சி வசம் இருக்கிறது. இந்தத் தொகுதியில்தான் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் முதல் சட்டசபைத் தொகுதி இது என்ற பெருமையும் இத்தொகுதிக்குக் கிடைத்துள்ளது.
அதேசமயம், அகிலேஷ் யாதவ் இன்னொரு தொகுதியிலும் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி போட்டியிடுவதாக இருந்தால், மைன்பூரி சதார், கன்னாஜ் மாவட்டத்தில் உள்ள சிப்ரமா, அஸம்கர் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர், சம்பல் மாவட்டத்தில் உள்ள குன்னார் ஆகிய தொகுதிகளும் பரிசீலனையில் உள்ளன.
தற்போது அஸம்கர் லோக்சபா தொகுதி உறுப்பினராக இருக்கிறார் அகிலேஷ் யாதவ். அவர் சட்டசபைத் தேர்தலில் இதுவரை போட்டியிட்டதில்லை. எனவே இந்த முறை அவர் போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment