அரசு ஊழியர்களுக்கு விடுமுறை: வெளியான ஹேப்பி நியூஸ்!
ஜனவரி 17ஆம் தேதி திங்கள் கிழமை அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. பெரும்பாலான சேவைகள் 50 சதவீதத்துடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவன தங்களது ஊழியர்களை பெரும்பாலும் வீட்டில் இருந்தே பணி புரிய வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, நடப்பாண்டுக்கான பொங்கல் பண்டிகை வருகிற 14ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, 14,15,16 ஆகிய தினங்கள் முறையே வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனவரி 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தைப்பூசத்திற்கும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், ஜனவரி 17ஆம் தேதி திங்கள் கிழமை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்படுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் உள்ள நிலையில், 14.01.2022 (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாகவும், 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.01.2022, தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பணியாளர்கள் சங்கங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 16.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையிலும், 18.01.2022 தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறையானதாலும், இடைப்பட்ட நாளான 17.01.2022 (திங்கட்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அதற்கான 29.01.2022 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment