பெகாசஸ் உளவு விவகாரம்: சிக்கிய மத்திய அரசு: டார்கெட் செய்ய எதிர்க்கட்சிகள் ரெடி!
பெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன
உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக உரிமை போராளிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்களின் செல்போன்கள், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டு, அவர்களின் தகவல்கள் அரசிடம் விற்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு செய்தி வெளியானது.
இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரான்ஸை சேர்ந்த ஊடக நிறுவனமான ஃபர்பிடன் ஸ்டோரிஸ் நிறுவனத்துடன் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகைகள் இணைந்து இந்த தகவலை புலனாய்வு செய்து வெளியிட்டது. ஆனால், இந்தச் செய்தியில் உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம் என்று என்எஸ்ஓ விளக்கமளித்தது.
அதேபோல், இந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்த மத்திய அரசு, இந்த குற்றசாட்டுகள் அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. அதேசமயம், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மத்திய அரசு வாங்கியது உண்மை என்பதை 'நியு யார்க் டைம்ஸ்' நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை வாங்கியதாகவும், 2017 இல் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்குச் சென்று செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த உளவுச் செயலி வாங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தொகை தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கீழ் செயல்படும் ‘தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்’ ( NSCS) என்ற அமைப்பின் மூலமாக வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்து அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறையும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பினர் என்பது கவனிக்கத்தக்கது.
தற்போது வெளியாகியுள்ள நியு யார்க் டைம்ஸ் செய்தி குறித்து மத்திய அரசு கூறுகையில், “இந்த விவகாரம் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வசம் உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மேற்பார்வையில் உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன் அறிக்கைக்காக அரசு காத்திருக்கிறது.” என்று விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment