முதலீட்டாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொல்லுமா மத்திய பட்ஜெட்?
மத்திய பட்ஜெட்டில் பிபிஎஃப் உள்ளிட்ட முதலீடுகளுக்கான வரி வரம்பு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் சில நேரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, பல்வேறு துறையினரும் வல்லுநர்களும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்து வந்தனர். மிக முக்கியமாக பிபிஎஃப், தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட முதலீட்டுத் திட்டங்களுக்கான வரிச் சலுகை வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-இன் உச்சவரம்பை நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர்த்துவாரா என்று பெரும்பாலான முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது பிரிவு 80சி-ஐ பயன்படுத்தி குறிப்பிட்ட முதலீடுகளின் மூலம் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும். இந்த உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, பிபிஎஃப் முதலீட்டுத் திட்டத்துக்கான வரம்பை உயர்த்த வேண்டும் என்று இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் மத்திய நிதியமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
நீண்ட காலமாகவே ரூ.1.50 லட்சம் என்ற வரம்பு உயர்த்தப்படாமல் இருப்பதாகவும், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் சலுகை தரும் வகையில் இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகை உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. பிபிஎஃப் திட்டம் என்பது 15 வருட முதலீட்டு திட்டமாகும். இதில் முதலீடு செய்வோருக்கு 7.1 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment