நஷ்டம் குறைகிறது: மின் கட்டணம் குறைய வாய்ப்பு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 2, 2022

நஷ்டம் குறைகிறது: மின் கட்டணம் குறைய வாய்ப்பு?

நஷ்டம் குறைகிறது: மின் கட்டணம் குறைய வாய்ப்பு?




மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
நாடு முழுவதும் தடையில்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், 12 சதவீதம் என்றளவில் உள்ள மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்கவும் புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை மத்திய அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்திற்காக, ரூ.3.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி, மாநில மின் வாரியங்களுக்கு கடனாக வழங்கப்பட உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் திட்ட பணிகளை முடித்து விட்டால் கடனில் 60 சதவீதம் மானியமாக கிடைக்கும், அந்த தொகையை செலுத்த தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின் வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர்களில் மீட்டர் பொருத்தப்படவுள்ளது. இதனால் மின் இழப்பு, மின்னழுத்த பிரச்சினை உள்ள இடங்கள் துல்லியமாக கண்டறியப்பட்டு, அங்கு மீண்டும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள், மின் வினியோக பெட்டிகள் அமைக்கப்படும்.

மேலும், வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இதனால் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஊழியர்கள் நேரில் செல்ல தேவையில்லை. மின் வழித்தடம் முதல் வீடு வரை பொருத்தப்படும் அனைத்து மீட்டர்களும் தொலைத்தொடர்பு வசதியுடன், மின்வாரிய சர்வர் உடன் இணைக்கப்படும். இதனால், வீடுகளில் மின் பயன்பாட்டை தினசரி, வாரம், மாதம் என கணக்கெடுக்க முடியும். மின் வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளையும், பிரச்சினைகளையும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தே துல்லியமாக கண்டறிய முடியும். இதனால், அவற்றை விரைந்து சரிசெய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட முடியும்.

புதுப்பிக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ், அதிக தூரம் செல்லும் மின் வழித்தடங்களில் ஒவ்வொரு 2 கி.மீ. துாரத்திற்கும் தனித்தனி ஸ்விட்ச் யார்டு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் மின் வழித்தடத்தில் பழுது ஏற்படும் போது, அந்த வழித்தடம் முழுவதும் மின் வினியோகத்தை நிறுத்துவதற்கு பதில் எந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அதற்கு உட்பட்ட 2 கி.மீ. தூரம் மட்டுமே மின் வினியோகம் நிறுத்தப்படும். இதனால், நுகர்வோர் அதிகளவில் பாதிக்கப்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மின்வாரிய அதிகாரிகள்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் அனைத்து மின் வழித்தடங்கள், டிரான்ஸ்பார்மர்களிலும் மீட்டர் பொருத்தப்படும். மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது, மின் இழப்பு ஏற்படுவது வழக்கம். புதிய திட்டத்தின்படி, இதனை குறைக்க வாய்ப்புள்ளது. தற்போது மின் உற்பத்தி, கொள்முதல், வினியோகம் போன்ற செலவுகளை உள்ளடக்கிய, ஒரு யூனிட் மின்சார விற்பனை ரூ.9.71 ஆக உள்ளது. ஆனால் வரவு ரூ.7.71யாக இருப்பதால் இரண்டு ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை புதுப்பிக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் குறைக்க முடியும்” என்று கூறுகின்றனர்.

ஒரு யூனிட் மின்சாரம் சுமார் ரூ.9 என்ற அளவில் வாங்கி வருவாய் 2 ரூபாய் நஷ்டத்திலும் கூட, அதனை குறைந்த விலைக்கு மின்வாரியம் பொதுமக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், தற்போது நஷ்டம் குறைவதால் மின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad