நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 30, 2022

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது!



குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் (2022-23ஆம் நிதியாண்டு) இன்று கூடுகிறது. இந்த கூட்டத் தொடர் முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மாநிலங்களவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் உரையில் மத்திய அரசால் கடந்தாண்டு செயல்படுத்திய சாதனைகளும், வரும் நிதி ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த விபரங்களும் இடம்பெறும் என தெரிகிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் இன்றும், நாளையும் உடனடிக் கேள்வி நேரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடிக் கேள்வி நேரத்தில் எழுப்பும் விவகாரங்கள் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளதால், அப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகரங்களை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

முன்னதாக, கொரோனா தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியதும், 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெற்றது. ஆனால், பெரும்பாலான உறுப்பினர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவை நடவடிக்கை முன்கூட்டியே முடிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனாவை காரணம் காட்டி கடந்த 2020ஆம் ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு நடத்தவில்லை.

இதையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரும், ஜூலை மாதம் மழைக்காலக் கூட்டத்தொடரும் நடைபெற்றது. குளிர்காலக் கூட்டத்தொடர் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 23ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த அக்கூட்டத்தொடர், ஒருநாள் முன்கூட்டியே 22ஆம் தேதி முடிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, கொரோனா தொற்று உள்ளிட்டவைகளால் மேற்கண்ட அனைத்து அமர்வுகளும் சரிவர நடைபெறவில்லை. அதன் தொடர்ச்சியாக, தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி (இன்று) தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad