திமுகவிடம் பெரியண்ணன் மனப்பான்மையா? மறுக்கும் துரை வைகோ - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 31, 2022

திமுகவிடம் பெரியண்ணன் மனப்பான்மையா? மறுக்கும் துரை வைகோ

திமுகவிடம் பெரியண்ணன் மனப்பான்மையா? மறுக்கும் துரை வைகோ



திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலின் போது அதிக இடங்களில் திமுக போட்டியிட முனைப்பு காட்டியது. மேலும் சிறிய கட்சிகளை தங்கள் சின்னத்தில் போட்டியிடுமாறு வலியுறுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கட்சிகளுமே ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையில் சற்று அதிருப்தியடைந்தனர். இருப்பினும் அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சமரசங்களுக்கு சம்மதித்தனர்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மாவட்ட அளவிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மிக குறைவான இடங்களையே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கூட்டணி கட்சியினரை மாவட்ட திமுகவினர் அணுகும் விதமும் விமர்சனத்திக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் திமுகவோடு கூட்டணியில் தொடரும் மதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இணைந்து களம் காண்கின்றது.

மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, "இடப்பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட வாரியாகவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பெண்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்த சிலருக்கு இடங்களைக் கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.

இப்போது அரசியல் களத்தில் நிலவும் அசாதாரண சூழலில் மதவாத சக்திகள் வேரூன்றக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். இதன் அடிப்படையில் நாங்கள் எப்போதும் திமுக உடன் கைகோர்த்து நிற்கிறோம். மதிமுகவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தான் அனைத்து முடிவெடுக்கின்றனர். அதில் எனக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. வைகோ நலமுடன் இருக்கிறார். இருப்பினும், கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் வைகோ பிரசாரத்திற்குச் செல்ல வாய்ப்பில்லை.

திமுகவிடம் பெரியண்ணன் மனப்பான்மை இல்லை. முதல்வர் தாய் உள்ளத்தோடு இடங்களை ஒதுக்கீடு செய்தார். சில இடங்களில் மாவட்ட பொறுப்பாளர்களால் பேச்சுவார்த்தையில் சிக்கல் இருக்கலாம். இருப்பினும், நம்பிக்கையுடன் இருக்கிறோம். திமுக நல்லதொரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் எனத் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை நிறைவேற்ற வேண்டியது எனது கடமை" என்று அவர் தெரிவித்தார்.



No comments:

Post a Comment

Post Top Ad