மொதல்ல தனியா நில்லுங்க.. பாஜக நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக பதிலடி!
முடிந்தால் தேர்தலில் தனியாக போட்டியிடும்படி நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி பதிலடி.
தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் அதிமுக குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “திமுக ஆட்சி முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. அந்த 4 ஆண்டுகளும் ஆட்சி நீடிக்குமா என்பது தெரியாது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவை பார்க்க முடியவில்லை. 4 பேர் இருந்தாலும் பாஜகதான் பேசுகிறது.
அதிமுக எதிர்க்கட்சியாக இல்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை” என்று பேசினார். நயினார் நாகேந்திரனின் கருத்து அதிமுக வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது. மேலும், நயினார் நாகேந்திரனே அதிமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தவர்தான். இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி ட்விட்டரில், “அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பது போல், அதிமுகவின் தயவால் சட்டமன்றத்தில் நுழைந்து, தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள அதிமுகவுக்கு அரசியல் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. ஆண்மையோடு தனித்து நில்லுங்கள் நயினார் நாகேந்திரன்” என்று கடுமையாக விமர்சித்துள்ளது
No comments:
Post a Comment