பிஎம் கிசான்: ஒரு வீட்டில் எத்தனை பேருக்கு பணம் கிடைக்கும்?
10ஆவது தவணைப் பணம் விடுவிப்பு!
ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு 6000 ரூபாய் நிதியுதவி கிடைக்கும் என்ற விளக்கத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.
விவசாயிகளுக்கு நிதியுதவி!
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மட்டும் மூன்று தவணைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.
10ஆவது தவணை!
இத்திட்டத்தின் 10ஆவது தவணைப் பணம் சமீபத்தில் ஜனவரி 1ஆம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினத்தில் இந்த நிதியுதவியை வழங்கினார். 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த நிதியுதவியைப் பெற்றனர். மொத்தமாக ரூ.20,000 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டது.
ஒரு குடும்பத்தில் எத்தனை பேர்?
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற சில விதிமுறைகள் உள்ளன. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நிதியுதவி கிடைக்கும். அதாவது கணவன் அல்லது மனைவி ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே நிதியுதவி பெறமுடியும். பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி மற்றும் ஒரு மைனர் குழந்தை ஆகியோர் மட்டுமே. அதேபோல ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் வைத்துள்ள மொத்த நிலத்தின் கையிருப்பு 2 ஹெக்டேர் வரை மட்டுமே இருக்க வேண்டும்.
யாருக்கெல்லாம் கிடைக்காது?
நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள், மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவி பெற விண்ணப்பிக்க முடியாது.
No comments:
Post a Comment