அரிவாள் வெட்டில் முடிந்த ராமநாதபுரம் கபடி போட்டி!
இராமநாதபுரம் அருகே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் இருதரப்பினர் மோதலால் 6 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடி பகுதியில் அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தலைமையில் நேற்று கபடி போட்டி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் மதிப்பெண்கள் தவறுதலாக கூறியதாக சொல்லி அதே பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவருக்கும் ராஜேஷ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் தொண்டி காவல் துறையினர் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இன்று தர்மராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜேஷ் குடும்பத்தினரை பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியதால்தடுக்க வந்த இரு பெண்கள் உட்பட 6 பேருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. மற்றவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அனைவருக்கும் தொண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு திருவானைக்காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜான் பிரிட்டோ, தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன், காவல் சார்பு ஆய்வாளர்கள் பூமிநாதன், விஜயபாஸ்கரன், குற்றப்பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் மாரி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் ராஜேஷ் தரப்பினர் மற்றும் தர்மராஜ் தரப்பினரிடையே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளான ராஜேஷ் தர்மராஜ் ஆயுதங்கள் பயன்படுத்திய முனீஸ்வரன் நந்தகுமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
அவர்களை தேடும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் புதுக்குடியில் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment