உத்தரகண்ட் சட்டப்பேரவை தேர்தல்: முதல்வர் போட்டியிடும் தொகுதி இதுதான்!
உத்தரகண்ட் முதல்வர் போட்டியிடும் தொகுதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது
பஞ்சாப், உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களுக்கு, வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், கடந்த ஓராண்டில் மூன்று முதலமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில், மொத்தம் 70 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 36 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதற்காக உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி படு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்நிலையில் இன்று, உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில், உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காடிமா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ளேன். எங்கள் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 60 தொகுதிகளை பாஜக கைப்பற்றி மக்களின் பெரும் ஆதரவுடன் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள மற்ற வேட்பாளர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, வரும் 25 ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட பாஜக திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment