ராமநாதபுரத்தில் 350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்..!
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் பகுதியில் 350 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல், ஒருவர் கைது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக, வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தேவிபட்டினம் சுற்றுவட்டார கடற்கரைப் பகுதிகளில் வனத்துறையினர் ரகசிய ஆய்வினை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இன்று வனசரக அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் சோதனையிட்ட போது, தேவிப்பட்டினம் மணல்வாடி தெரு பகுதியில் ஒரு வீட்டில் பச்சை கடல் அட்டைகள், மூட்டை, மூட்டையாக அவித்து பதப்படுத்துவதற்காக தயாராக இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, ராமநாதபுரம் வனசரக அலுவலர் ஜபஷ் மற்றும் வனக் காப்பாளர்கள் முத்துக்குமார், செல்வராகவன், மரைன் போலீசார் அய்யனார், சார்பு ஆய்வாளர் க்யூ பிராஞ்ச் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது, ஏற்கனவே கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளியான ஜெபின் உறவினரான 45 வயதுடைய ஷாஜகான் என்பவரது வீட்டில் சுமார் 350 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மூட்டை, மூட்டையாக இருந்தது தெரியவந்தது.
மேலும், அந்த கடல் அட்டைகளை பதப்படுத்துவற்காக பயன்படுத்த வைத்திருந்த பாத்திரங்கள், சிலிண்டர் அடுப்பு என அனைத்தையும் கைப்பற்றி, ஷாஜகானை கைது செய்து, ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, விசாரணை மேற்கொண்டதையடுத்து, ராமநாதபுரம் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அரசால் தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களில் கடல் அட்டை வகையும் ஒன்றாகும், இதனை சமூகவிரோதிகள் மருத்துவ உபயோகத்திகாக இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு கடத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment