டாஸ்மாக் மதுபான கடைகள் மூடலா? -அமைச்சர் சொல்வது இதுதான்!
கொரோனா காரணமாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுமா என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் ஆணைக்கிணங்க இன்று கோவை மாவட்டத்தில் 2,800 பேருக்கு தாலிக்கு தங்கம் வாங்கப்பட்டுள்ளது. மேலும் இருபத்தி ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், பல்வேறு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றைக் குறைக்க 100 வார்டுகளிலும் சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பேரூராட்சி பகுதிகளிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சிறுவாணி அணை நீண்டகால திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நிதி ஆதாரம் பெறப்பட்டு, கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் கடைகளை தொற்று குறையும் வரை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு முதல்வர் வரக்கூடிய காலத்தில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிப்பார்; அதன்படி அரசு செயல்படும்.
கோவை மதுக்கரை பகுதியில் உள்ள சிறுத்தையை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பில்லாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்பவர்களுக்கு நேர்காணல் நாளை கோவையில் நடைபெறுகிறது. அதில் கூட்டணிக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
No comments:
Post a Comment