‘இனி புஜாரா, ரஹானேவுக்கு இடம் கிடைக்குமா?’ கோலியிடம் கேள்வி: அவரின் ‘காட்டமான’ பதில் இதுதான்!
புஜாரா, ரஹானேவுடன் அமர்ந்து பேச மாட்டேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து, இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது. அடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் துவங்கி நடைபெற்றது.
இதில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 212 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், கீகன் பீட்டர்சன் 82 ரன்கள் குவித்து, அணிக்கு 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இதனால், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
முக்கிய காரணம்:
இத்தொடரை இழந்ததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அஜிங்கிய ரஹானே, சேத்தேஸ்வர் புஜாரா ஆகியோர்தான். இரண்டாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே இருவரும் அரை சதம் எடுத்தனர். மற்ற இன்னிங்ஸ்களில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை. ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் ஆகியோர் பார்மில் இருந்த நிலையில், அவர்களுக்குப் பதிலாக ரஹானே, புஜாராவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்ததுதான் தோல்விக்கு காரணம், இதனால், இனி இந்த இருவருக்கும் வாய்ப்பு கொடுக்க கூடாது என பலரும் பேசி வருகின்றனர்.
கோலி பேட்டி:
இந்நிலையில், தொடர் முடிந்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கோலியிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. இனி புஜாரா, ரஹானேவுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு, “அவர்களின் எதிர்காலம் குறித்து, அவர்களுடன் அமர்ந்து நான் பேச மாட்டேன். அணித் தேர்வாளர்களிடம் தான் நீங்கள் இந்த கேள்வியைக் கேட்க வேண்டும். நான் ஏற்கனவே கூறிவிட்டேன், மறுபடியும் சொல்கிறேன்…புஜாரா, ரஹானே போன்ற வீரர்கள் அணிக்கு நிச்சயம் தேவை. அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். பல வருடங்களாக டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “இரண்டாவது டெஸ்டில், நெருக்கடியான நேரத்தில் இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதனால்தான், தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடிந்தது. அவர்கள் அணியில் நீடிப்பார்களா, இல்லையா? என்பது குறித்து தேர்வுக்குழுதான் முடிவு செய்யும். அந்த இருவர் குறித்தும் நான் பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment