இந்த வாட்டி கவலைப்படாதீங்க; அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 7, 2022

இந்த வாட்டி கவலைப்படாதீங்க; அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்!

இந்த வாட்டி கவலைப்படாதீங்க; அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்!ஆன்லைன் வழி இடமாறுதல் கவுன்சிலிங் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் நான்கு லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான உத்தரவுகளை பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்து வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஓராண்டு பணி முடித்திருந்தால் இடமாறுதல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியும். இத்தகைய விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்விச் சூழல் தலைகீழாக மாறிப் போனது. பல மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங் ஓராண்டாக நடத்தப்படவில்லை. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்திற்கு பின், நிலைமை படிப்படியாக சீரடைந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டிற்கான இடமாறுதல் கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டது.

அதில், டிசம்பர் 31, 2021 முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கினர். ஒவ்வொரு பதவி நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும் படிப்படியாக இடமாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பதவி உயர்வு தொடர்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட இருக்கிறது.

ஆசிரியர்கள் விருப்பமான இடங்களை கவுன்சிலிங் வாயிலாக தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கிடையில் ஆசிரியர்களுக்கான பல்வேறு வகையான நிர்வாக மாறுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் நிர்வாக இடமாறுதல் நடைபெற்றால், ஆசிரியர்கள் விரும்பும் காலியிடங்கள் நிரம்பி விடும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இது ஆசிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் என்பதால் நிர்வாக இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று முடியும் வரை நிர்வாக மாறுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கிற்காக ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர். அதேசமயம் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு சிக்கல் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் ஆன்லைன் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றே அதிகாரிகள் தரப்பு தரும் விளக்கமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad