யோகியிடம் இருக்கும் மைனஸ்: மோடி அலை இந்த முறை உ.பி.யில் வேலை செய்யுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 17, 2022

யோகியிடம் இருக்கும் மைனஸ்: மோடி அலை இந்த முறை உ.பி.யில் வேலை செய்யுமா?

யோகியிடம் இருக்கும் மைனஸ்: மோடி அலை இந்த முறை உ.பி.யில் வேலை செய்யுமா?


உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பல்வேறு குறைகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது


நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. பாஜகவை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்கி விட்டு ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
பாஜக எப்போது, எந்த தேர்தல் நடந்தாலும் அக்கட்சியின் முகமாக பிரதமர் மோடியே முன் நிறுத்தப்படுவார். அவரை முன்னிறுத்திய கடந்த கால தேர்தல்களை பாஜக எதிர்கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியே பிரதானமாக முன் நிறுத்தப்பட்டார். அவரை முன் வைத்துதான் பாஜக அந்த தேர்தலை எதிர்கொண்டு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

பிரதமர் மோடியை பொறுத்தவரை அனைத்து தரப்பின் ஆதரவையும் பெற்ற ஒருவராகவே இருக்கிறார். எங்கு தேர்தல் நடந்தாலும் எப்போதுமே தயார் நிலையில் இருக்கக்கூடிய ஒரு கட்சியாகவே பாஜக இருக்கிறது. அதற்கு காரணம் டெல்லி தலைமை எந்த கட்டளையை இட்டாலும், அதனை பூத் கமிட்டி வரை கச்சிதமாக செய்து முடிக்கும் கட்டமைப்பு அக்கட்சியிடம் உள்ளது. எனவே தேர்தலுக்கான வியூகம் எப்போதும் பாஜகவிடம் தயாராகவே இருக்கும்.


யோகி ஆதித்யநாத் தனக்கான செல்வாக்கை உத்தரப்பிரதேசத்தில் கட்டமைத்துள்ளார் என்பதை மறுக்க முடியாது. பாஜக ஆளும் மற்ற மாநிலங்களை எடுத்துக் கொண்டால் அம்மாநில முதல்வர்கள் யாரும் தனிப்பட்ட செல்வாக்குடன் இருப்பது அரிது. டெல்லி தலைமை சொல்லும் பணிகளை மட்டுமே செய்யும் நபர்களாகவே இருப்பார்கள். ஆனால், யோகியோ அதற்கு மாறாக டெல்லி என்ன சொன்னாலும் சரி, மாநிலத்தில் தனக்கான பிம்பம் கெட்டுபோகாத வண்ணம் செயல்படக் கூடியவர்.

ஆனாலும், அவரிடம் இரண்டு முக்கியமான குறைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. இந்துத்துவ கொள்கையில் மிகவும் வலுவாக இருப்பவர் யோகி. இதனால் அனைவரின் ஆதரவையும் அவரால் பெறமுடிவதில்லை என்பது ஒன்று. தாகூர் சமூகத்துக்கு தலைவராக தன்னை முன்னிலைப் படுத்துவதில் ஆர்வம் காட்டுவதுடன் அவர்கள் சார்ந்த நலத்திட்ட விஷயங்களில் அக்கறை காட்டுகிறார் என்பது மற்றொன்று. இவை குறைகளாக சுட்டிக்காட்டப்பட்டாலும் அதனை தனக்கான பலமாகவே அவர் பார்க்கிறார்.

சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்ற முழக்கத்தை முன்வைத்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு முறையும் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார் பிரதமர் மோடி. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி தற்போது வரை இந்த முழக்கத்தை முன்வைத்தே அவர் பிரசாரம் செய்து வருகிறார். இதனை தமிழில் சொல்ல வேண்டுமானால், அனைவருக்குமான ஆதரவு; அனைவருக்குமான வளர்ச்சி; அனைவருக்குமான நம்பிக்கை; என்பது பொருளாகும்.

இந்த முழக்கம் யோகி ஆதித்யநாத்திடம் இல்லை; அவர் ஒரு சார்பாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. தேர்தலையொட்டி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றையும் அவர் தெரிவித்திருந்தார். 80 சதவீதத்தினருக்கும், 20 சதவீதத்தினருக்கும் இடையே நடக்கும் போர்தான் எதிர்வரவுள்ள இந்த தேர்தல் என்று அவர் தெரிவித்த கருத்து அம்மாநிலத்தை சேர்ந்த குறிப்பிட்ட சில சமூகத்தினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களாலே அவரை சந்திப்பது எளிதான காரியம் அல்ல என்கிறார்கள். அதற்கென பெரியதாக நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், அவர் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் என்று பணிப்பதாகவும் அவரது அமைச்சரவையில் இருந்து வெளியேறியவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மொத்தம் 20 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் ஆதிக்க சாதியினர் 25 சதவீதம் பேரும், ஓபிசி பிரிவில் 39 சதவீதம் பேரும், எஸ்சி., எஸ்டி பிரிவில் 20 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 16 சதவீதம் பேரும் உள்ளனர். கடந்த தேர்தலில் பிராமணர்களின் வாக்கு மட்டுமல்லாமல் ஓபிசி பிரிவினரின் வாக்குகளும் கணிசமாக பாஜகவுக்கு கிடைத்ததாலேயே அக்கட்சி பெருவாரியான பெற்றது.

ஆனால், இந்த முறை ஓபிசி பிரிவினரின் வாக்குகள் பாஜகவுக்கு சென்றுவிடக் கூடாது என்பதில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முனைப்பு காட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே, பாஜகவில் இருக்கும் அதிருப்தி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அடுத்தடுத்து சமாஜ்வாதி கட்சியில் இணைக்கப்பட்டு வருவதாக அம்மாநில அரசியல் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுவரை 3 அமைச்சர்கள், 9 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இருந்து சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர் என்பது வனிக்கத்தக்கது.

இந்த பட்டியல் இன்னும் நீளூம் என்கிறார்கள். யோகி ஆதித்யநாத் அனைத்து அமைச்சர்களிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதில்லை என்பதாலேயே அமைச்சர்கள் இது போன்று கட்சி மாறுகிறார்கள் என்பதை இதற்கான காரணமாக கூறுகிறார்கள். குறிப்பாக பாஜகவில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் ஓபிசி பிரிவை சார்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் குறிப்பிட்ட சில மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக கூறப்படுவதால் இது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள். யோகியின் இந்த மைனஸ்களை பிரதமர் மோடியின் இமேஜ் மூலம் பாஜக சரிகட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad