பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷை கடித்த பாம்பு!
பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ் பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவர சுமார் 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை லாவகமாக பிடித்துள்ளார். அப்படி பாம்புகளை பிடிக்கும் போது பலமுறை பாம்புகளின் கடிகளுக்கும் ஆளாகியுள்ளார். இந்த நிலையில், பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ் பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷுக்கு தகவல் வந்துள்ளது.
அதன்படி, அந்த வீட்டுக்கு விரைந்து சென்ற வாவா சுரேஷ், அங்கு பதுங்கியிருந்த நல்ல பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேஷின் வலது காலில் கடித்தது. அதன் தொடர்ச்சியாக, சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயங்கி விழுந்தார்.
இதையடுத்தும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டு வருவதகாவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன
அனைவரிடமும் சகோதரத்துவத்துடனும், நட்புடனும் பழகும் குணம் கொண்ட வாவா சுரேஷ் விரைவில் குணமடைந்து மீண்டும் வர வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.,யுமான சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த செய்தியை அறிந்து மிகவும் வருத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். கடைசியாக இதேபோன்று நடந்தபோது அவரை மருத்துவமனையில் சந்தித்ததாகவும், அப்போது அவர் மீண்டும் வந்ததால் நிம்மதியடைந்ததாகவும் சசி தரூர் தெரிவித்துள்ளார். மேலும், திருவனந்தபுரம் மக்களுக்கு அவரது துணிச்சலான சேவைகள் தொடர கடவுள் அவரை காப்பாற்றட்டும் என்றும் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment