முதல்வர்களுடன் ஆலோசிக்கும் பிரதமர் மோடி; கட்டுப்பாடுகளை கடுமையாக்க வலியுறுத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 9, 2022

முதல்வர்களுடன் ஆலோசிக்கும் பிரதமர் மோடி; கட்டுப்பாடுகளை கடுமையாக்க வலியுறுத்தல்!

முதல்வர்களுடன் ஆலோசிக்கும் பிரதமர் மோடி; கட்டுப்பாடுகளை கடுமையாக்க வலியுறுத்தல்!


கொரோனா நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் பரவல் கடந்த டிசம்பர் 2ம் தேதியன்று இந்தியாவில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஓமைக்ரான் பரவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 616 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,623ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், கொரோனா பாதிப்பும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. கொரோனா, ஒமைக்ரான் பரவலை கட்டுக்குள் கொண்டு வர இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மூத்த அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் உருமாற்றம் தொடர்ந்து வருவதால், அது தொடர்பான சோதனை, தடுப்பூசிகள், மரபணு வரிசைமுறை உள்ளிட்ட மருந்தியல் தலையீடுகளில் தொடர்ச்சியான ஆராய்ச்சி தேவை என வலியுறுத்தினார்.

இளம் பருவத்தினருக்கான தடுப்பூசி இயக்கத்தை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கிளஸ்டர்களில் தீவிர கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர கண்காணிப்பு தொடர வேண்டும். பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பொது சுகாதாரம், மாநிலங்களில் நிலவும் கொரோனா சூழ்நிலைகள், உள்ளிட்டவைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் விவாதிக்கும் பொருட்டு ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, கொரோனாவுக்கான சிகிச்சைகளை நிர்வகிக்கும் போது, கொரோனா அல்லாத சுகாதார சேவைகளில் கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் அப்போது எடுத்துரைத்தார்.

முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்த போதிலிருந்தே மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இந்த நிலையில், மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், தீவிர கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என மோடி கூறியுள்ளதால், வரவுள்ள நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அவை தொடர வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad