தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்ற முடியாது.. உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் மாற்றம் செய்ய வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலில், மறைந்த முதல்வர் கருணாநிதி திருத்தங்கள் செய்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடலாக அறிவித்ததை எதிர்த்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலின் இரண்டாவது பத்தியில், "பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும், களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்” சீரிளமைத் திறம் வியந்து, செயல்மறந்து வாழ்த்துதுமே என்ற வரிகளை கடந்த 1972ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு நீக்கி உத்தரவிட்டது. அப்போது முதல் திருத்தப்பட்ட பாடல் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக பாடப்பட்டு வருகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான பாடலை திருத்தியதை எதிர்த்து ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரான ஜெ.மோகன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் 2007ல் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் சமஸ்கிருதம் போல் அல்லாமல் இளமையாக தமிழ் மொழி இருப்பதை குறிப்பிடும் வகையிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட திராவிட மொழிகளை ஒப்பிட்டும் கூறப்பட்ட வரிகளை நீக்கியது. ஆரிய மொழியை போல் உலக மொழியில் வழகழிந்தொழிந்து சிதைந்து போனது போல் இல்லாமல் தமிழ் மொழி சீரிளமைத் திறம் வியந்து வளரும் என்ற விளக்கத்துடன் இருந்த பாடலை திருத்தியுள்ளதாகவும் இந்த செயல் மனோன்மனியம் சுந்தரனாரருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே திருத்தப்பட்ட பாடலை தமிழ் பாடப்புத்தங்களில் இடம்பெற செய்துள்ளதையும், விழாக்களில் பாடுவதையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் சில வரிகள் திருத்தபட்டதாகவும் தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளதாகவும், பாடலுக்கான காப்புரிமையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை என்றும் தெரிவித்ததுடன், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரப்பட்டது.
இதையடுத்து 1972 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி முதல் பாடப்பட்டு வரும் தமிழ்தாய் வாழ்த்து பாடலை மாற்ற கோரி 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள், ஜெபமணி மோகன்ராஜின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment