குழந்தைகளுக்கு தடுப்பூசி: உயர் நீதிமன்றத்தில் சிறுமி மனுத்தாக்கல்!
குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிறுமி ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்
கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. பிரதமர் மோடி இதனை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இரண்டு டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது பூஸ்டர் டோஸ் செலுத்தவும், 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் 92 சதவீதம் பேருக்கு அதிகமாக முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 70 சதவீதம் பேருக்கு அதிகமாக 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 12 வயது சிறுமி ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 12 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் தொடார்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அச்சிறுமி கோரியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மே மாத காலகட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நாங்கள் பள்ளிக்குச் சென்று இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. வீட்டிலேயே இருப்பது மிகுந்த மன அழுத்தத்தைத் தருகிறது. தற்போது 15 முதல் 17 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், 12 வயதுக்கும் கீழ் உள்ள எங்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வெளிநாடுகளில் எங்கள் வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு ஃபைஸர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதனால் நான் அரசாங்கத்துக்கு இந்த விண்ணப்பத்தை முன்வைத்துள்ளேன்” என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்திவிட்டால் துணிச்சலுடன் பள்ளிக்கு செல்வேன் என்றும், தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் கொரோனாவின் தீவிர பாதிப்பில் இருந்து காக்கப்படுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment