நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளார்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று முன் தினம் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்தது.
இந்த நிலையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 12ஆவது வார்டு, செட்டி தெரு பகுதியில் போட்டியிட முன்னாள் கவுன்சிலரும், அதிமுக பொருளாளருமான அண்ணாதுரை அறிவிக்கப்பட்டார். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் மதியம் வரை அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தார். இதனால், 12ஆவது வார்டிற்கு மாற்று வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.இதனிடையே, எல்லாபுரம் திமுக ஒன்றிய செயலர் முன்னிலையில், அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அண்ணாதுரை தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment