உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை... ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சி அதிமுக செயலாளர் பொன் சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், ''சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் திமுகவினர் முறைகேடுகளிலும், தேர்தல் விதிமீறலிலும் ஈடுபட்டு வந்தனர்.
முறையாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் திமுகவினரை வெற்றி பெற்றதாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கை பணிகளில் மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்' என்றும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு அவசர வழக்காக தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 'உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தேர்தல் ஆணையம் பின்பற்றினாலும், ஆளுங்கட்சியினரால் தேர்தல் அதிகாரிகள் மிரட்டப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு ஊழியர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும்' என மனுதரார் சார்பாக கோரப்பட்டது.அப்போது நீதிபதிகள் யார் மிரட்டப்பட்டது? எந்த அதிகாரியாவது புகார் அளித்துள்ளாரா? மிரட்டியதாக குற்றம்சாட்டும் நபர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக
சேர்க்கப்பட்டுள்ளார்களா? மனுதாரருக்கு இதுவரை ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துள்ளதா? என நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
பின்னர் தேர்தலில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ளதாகவும், மாநில தேர்தல் ஆணையமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.இதேபோல முதுகுளத்தூர் பேரூராட்சி ஏழாவது வார்டு அதிமுக வேட்பாளரும், வாக்கு எண்ணிக்கைக்கு மற்ற தாலுகா அதிகாரிகளை நியமிக்க கோரிய வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
No comments:
Post a Comment