கொலை நகரமாகிறதா திருப்பூர்..? மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் கொலை..!
திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் பல்லடம் சாலையில் தினசரி சந்தை செயல்பட்டு வந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் காரணமாக தற்காலிகமாக அருகில் உள்ள காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்போது தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று வழக்கம்போல வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு வந்த போது சந்தையில் உள்ள விநாயகர் கோவில் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் உடலில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். கொலையானவர் பெயிண்டிங் தொழில் செய்து வந்த ஸ்ரீதர் எனவும் இவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மதுபாட்டில்கள் இருந்ததால் மதுபோதையில் பிரச்சினை ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய மார்க்கெட் வளாகத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் மாநகரில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கொலை சம்பவம் நடந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு வடமாநிலத்தை சேர்ந்த நேகா என்ற பெண் தனது கணவர் மற்றும் அவரது நண்பர் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்டு தாராபுரம் சாலை புது ரோடு பகுதியில் சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி கடுக்கார்த்தோட்டம் பகுதி உள்ள காட்டுப்பகுதியில் சதீஷ் என்ற இளைஞர் தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இச்சம்பவமும் நேற்று நள்ளிரவில் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment