என் புருஷனுக்கு என்ன குறை.. வரிந்து கட்டிக் கொண்டு வரும் சித்து மனைவி!
எனது கணவர்தான் முதல்வர் பதவிக்கு முழுமையான தகுதி வாய்ந்தவர் என்று சித்துவின் மனைவி கருத்து.
முதல்வர் பதவிக்கு முழுமையாக தகுதியானவர் எனது கணவர். அவருக்கு என்ன தகுதி இல்லை.. ராகுல் காந்தி சரியாக ஆய்வு செய்திருந்தால் சித்துவைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பார் என்று நவ்ஜோத் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளர் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சென்னியையே காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை ராகுல் காந்தியே வெளியிட்டார். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு ராகுல் காந்தி சொல்வதை நான் மதிப்பேன் என்று கூறி பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார் சித்து. இந்த நிலையில் முதல்வர் பதவிக்கு தனது கணவர் முற்றிலும் தகுதியானவர் என்று சித்துவின் மனைவி கூறியுள்ளார்.
இதுகுறித்து சித்துவின் மனைவியும் முன்னாள் எம்எல்ஏவுமான நவ்ஜோத் கெளர் கூறுகையில், எனது கணவர்தான் முதல்வர் பதவிக்கு சரியான தேர்வாக இருந்திருப்பார். முதல்வர் பதவிக்கு திறமை, கல்வி, பணியாற்றும் திறமை, நேர்மை என பல விஷயங்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். அப்படி பரிசீலித்திருந்தால் எனது கணவர்தான் முதல் தேர்வாக இருந்திருப்பார். அவர் எனது கணவர் என்பதற்காக நான் சொல்லவில்லை. உண்மையிலேயே முழுத் தகுதி வாய்ந்தவர் எனது கணவர்.சென்னியையே முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவித்திருப்பது பஞ்சாப் காங்கிரஸுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படையாக பெரிய அளவில் பிரச்சினை வெடிக்கவில்லை. ஆனால் மூத்த தலைவர்களில் ஒருவரான சுனில் ஜாக்கர், தேர்தல் அரசியலை விட்டு விலகுவதாக அறித்துள்ளார். அவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர். சென்னியோ தலித் சீக்கியர் ஆவார். சித்து மறுபக்கம் அதிருப்தியுடன் வலம் வருகிறார். எல்லாமே நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது. இதற்கு மத்தியில்தான் சென்னி தனது பிரசாரங்களில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
சித்து தற்போது அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் அகாலிதளம் சார்பில் பிக்ரம் சிங் மஜிதியா போட்டியிடுகிறார். பாஜக சார்பில் முன்னாள் தமிழக ஐஏஎஸ் அதிகாரியான ஜக்மோகன் சிங் ராஜு போட்டியிடுகிறார். ஆம் ஆத்மி சார்பில் ஜீவன்ஜோத் கெளர் போட்டியில் உள்ளார். கணவரின் வெற்றிக்காக சித்துவின் மனைவி தீவிரப் பிரசாரத்தில் அங்கு ஈடுபட்டுள்ளார்.
No comments:
Post a Comment