முடிஞ்சா அத செஞ்சு பாருங்க... எடப்பாடிக்கு உதயநிதி சவால்!
முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கி பாருங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை டவுன் வாகையடி முனை பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர், 'திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி மக்கள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஏமாற்றியதை போன்று மீண்டும் ஏமாற்ற மாட்டீர்கள் என்று நினைப்பதாகவும் மக்களின் தற்போதைய எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் பரப்புரை தேவையில்லை என்றும் வெற்றி உறுதி என்று நினைப்பதாக தெரிவித்தார்.
'தமிழகத்திலும் சட்டப்பேரவை முடக்கப்படும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின், 'பாரதிய ஜனதா கட்சி இருக்கும் தைரியத்தில் இவ்வாறு பழனிச்சாமி பேசுவதாகவும் முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கி பாருங்கள் என்றும், அப்படி முடக்கப்பட்டால் மீண்டும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும்' எனவும் சவால் விடுத்தார்.அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி காலி செய்துவிட்ட நிலையிலும், கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று சொன்னதை செய்து காட்டியவர் முதல்வர்'
என்றும் உதயநிதி பெருமிதம் தெரிவித்தார்.
'சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு எப்போது என பென் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, 'மேலும் எட்டு மாதத்தில் படிப்படியாக சொன்ன திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்த அவர், தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டது போன்று சிலிண்டர் விலை, டீசல் விலை உள்ளிட்டவை குறைக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment