அதிமுகவை பிடித்த தரித்திரமே எடப்பாடி பழனிசாமி: போஸ்டரால் பரபரப்பு!
அதிமுகவை பிடித்த தரித்தரமே எடப்பாடி பழனிசாமி பதவி விலகு என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பல்வேறு திருப்பங்கள் அரங்கேறின. குறிப்பாக, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஓரங்கட்டப்பட்டு, ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோர் தலைமையின் கீழ் அணிகள் ஒன்றிணைந்தன. தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவின் பின்னால், அதிமுக செல்லும் என ஆருடங்கள் கூறப்பட்டன. ஆனால், அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் சசிகலா. இருப்பினும், அரசியல் வருவதற்கான தொடர் முயற்சிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்ற நிலையில், பல இடங்களில் டெபாசிட்டை இழந்த அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தல் முடிவுகள் அதிமுகவினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த இரு தினங்களாக அதிமுகவிற்கு தலைமை மாற்றம் தேவை எனவும், சசிகலா அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் எனவும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், “அதிமுகவுக்கு தொடர் தோல்விகளை தந்து கொண்டிருக்கும் அதிமுகவை பிடித்த தரித்திரமே எடப்பாடி பழனிசாமி விலகு விலகு கட்சியை விட்டு விலகு” என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதன் கீழ், டிவிஆர் செல்வகுமார் சைதை பகுதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை அதிமுகவினர் இன்று கொண்டாடி வரும் நிலையில், அதிமுகவின் தரித்திரம் எடப்பாடி பழனிசாமி எனவும், அவரை கட்சியை விட்டு விலக வேண்டும் எனவும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, “ஜெயலலிதாவின் நம்பிக்கை வீண்போகாமல் காத்துக் கொள்வது நமது அனைவரின் கடமையாகும். 50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் இது போல் தொடர் தோல்வியை கண்டதில்லை. இதை மனதில் எண்ணி பார்த்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று கூறினார், ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு. இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு இதை எண்ணிப் பார்த்த நாம் செயல்பட வேண்டும்.” என்று சசிகலா வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment