ரஷ்ய அதிபருடன் இன்றிரவு பேசும் பிரதமர் மோடி!
ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுடன் பிரதமர் மோடி இன்றிரவு பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா பல்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போர் நின்ற பிறகே விமானங்களை இயக்குவது பற்றி முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ள மத்திய அரசு, உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அதன் அண்டை நாடுகளுக்கு அழைத்து செல்ல அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.
இதனிடையே, உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை +380 997300428, +380 997300483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். situationroom@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.முன்னதாக, ரஷ்யாவுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது; உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என இந்தியாவுக்கான் உக்ரைன் தூதர் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில், உக்ரைன் - ரஷ்யா போர் சூழல் பிரச்சனையில் இந்தியா நடுநிலை வகிக்கும் எனவும், அமைதியை ஏற்படுத்தும் தீர்வை எதிர்நோக்கி இருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.
இந்த நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுடன் பிரதமர் மோடி இன்றிரவு பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, உலக நாடுகளின் நலன் கருதி போரை கைவிட வேண்டும் என அவர் கேட்டுக் கொள்ளவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment